`தாம்பத்ய உறவு; ஈடுபாடில்லாத மனைவி; காரணங்கள் இவையாக இருக்கலாம்!' – கணவர்களே கவனியுங்கள் – S2 E14

திருமணம், தாம்பத்திய உறவு என்று பேச ஆரம்பித்தாலே, அங்கு ஆண்களின் பிரச்னைகள் மட்டுமே பெரும்பாலும் பேசப்படுகின்றன. இதற்கு விந்து முந்துதல், உறுப்பின் அளவு என்று தாம்பத்திய உறவு தொடர்பான சிக்கல்கள் அவர்களுக்கு அதிகம் இருப்பது முதல் காரணம் என்றாலும், அந்த அளவுக்கு அதற்கான வாய்ப்பு ஆண்களுக்கு காலங்காலமாக இருந்துகொண்டிருக்கிறது என்பது முக்கியமான காரணம். “திருமணமான பெண்களுக்கு தாம்பத்திய உறவில் 5 பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறார்.

பாலியல் மருத்துவர் காமராஜ்

`தாம்பத்திய உறவின் மீதே வெறுப்பு!’

சில பெண்களுக்கு செக்ஸ் என்ற வார்த்தையின் மீதே வெறுப்பு இருக்கும். இதை நாங்கள் செக்ஸ் அவெர்ஷன் டிஸ்ஆர்டர் என்போம். சிறுவயதில் பாலியல் தொல்லை அல்லது பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதுதான் இதற்கான காரணம். இந்தப் பெண்களுக்கு செக்ஸின் மீது வெறுப்பு இருப்பதால், திருமணம் செய்துகொள்ளக் கூடாது; தாம்பத்திய உறவில் ஈடுபடவே கூடாது என்கிற தீர்மானத்தில் இருப்பார்கள். இதையும் மீறி இவர்களுக்குத் திருமணமாகிவிட்டாலும், உறவில் ஈடுபட மாட்டார்கள். காதலுடன் திருமணம் செய்த கணவனுக்கு இந்த மறுப்பு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும். கூடவே, `என்ன காரணம்னு தெரியலையே’, `ஒருவேளை நம்மளைப் பிடிக்கலையோ’ என்கிற குழப்பத்திலும் ஆழ்ந்துவிடுவார்கள் ஆண்கள். இப்படியெல்லாம் பதறாமல், மனைவியிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். பாலியல் தொல்லை மட்டுமே நிகழ்ந்திருக்கிறது என்றால், ஆறுதலாகப் பேசி கணவராலேயே அந்தக் காயத்தை ஆற்றிவிட முடியும். ஒருவேளை பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உளவியல் நிபுணரின் ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும். ஆனால், இந்த பிரச்னை சரி செய்யக்கூடியதே. 63 சதவிகிதப் பெண் குழந்தைகள் வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் தொல்லையையோ, வன்கொடுமையையோ சந்திப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், இந்த பிரச்னையை `கற்பு’ என்று குழப்பிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

வெறுப்பில்லை; ஆனால், விருப்பமும் இல்லை!

இரண்டாவது பிரச்னை கொஞ்சம் வித்தியாசமானது. இவர்கள் கணவருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வார்கள். ஆனால், சிலமுறை மட்டுமே. திருமணமான புதிதில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக இணங்குவார்கள். அதன்பிறகு, கணவர் தொந்தரவு செய்தால் சம்மதம் சொல்வார்கள். சிலர், கணவர் உறவுக்கு வற்புறுத்தினால், அவரை கோபமாகத் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களின் இந்த இயல்புக்கான காரணமும், நான் முதல் பிரச்னையில் சொன்ன அதே சிறு வயதில் சந்தித்த பாலியல் தொல்லை அல்லது பாலியல் வன்முறைதான். காயத்தை ஆற்றிவிட்டால் இவர்களும் மகிழ்ச்சியாக தாம்பத்திய உறவில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள்.

Couple (Representational Image)

உறவுப்பாதையில் இறுக்கம்!

இந்தப் பிரச்னையை மருத்துவர்கள் வஜைனிஸ்மஸ் என்போம். இந்தப் பிரச்னையைப்பற்றி எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், கணவரின் உறுப்பு உட்செலுத்தப்படும் நேரத்தில் மனைவி பயந்துவிடுவார். இந்த பயத்தின் காரணமாக மனைவியுடைய உறுப்பின் தசைகள் இறுக்கமாகிவிடும். இதனால், தாம்பத்திய உறவு முழுமையடையாமலே போய்விடும். இந்த நிலை பெரும்பாலும் திருமணமான புதிதில்தான் நடக்கிறது.

திருமணமான பெண்களில் 4 சதவிகிதம் பேருக்கு தாம்பத்திய உறவின் மீது பயம் இருக்கிறது. `ரொம்ப வலிக்குமோ’ என்பதில் ஆரம்பித்து சிறுவயதில் பாலியல் வன்முறை அனுபவித்தது வரைக்கும் வஜைனிஸ்மஸ்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் 5 நிலைகள் இருக்கின்றன. பயத்தில் உறவுக்கு மறுப்பதில் ஆரம்பித்து கணவரை எட்டி உதைப்பதுவரை செய்துவிடுவார்கள். இவர்களுக்கு சிகிச்சையளிக்கிற மருத்துவர்களைக்கூட எட்டி உதைத்து விடுவார்கள். அந்தளவுக்கு அவர்களை அறியாமலேயே செய்வதிது. அதனால், இந்த பிரச்னை இருக்கிற மனைவிகளை ஆதரவாக நடத்துவதுடன் பிரச்னை தீர உதவுவதிலும் கணவர்களுடைய பங்கு இருக்க வேண்டும்.

Couple (Representational Image)

உச்சக்கட்டம் அடைய முடியாமை!

பெரும்பாலான இந்தியப் பெண்கள் தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் அடைவதில்லை. தான் உச்சக்கட்டம் அடைவதில் தன்னுடைய பங்கு என்னவென்பதை மனைவிகள் அறியாதிருப்பதும், மனைவி உச்சக்கட்டம் அடைந்துவிட்டாளா, இல்லையா என்பது கணவர்களுக்குத் தெரியாதிருப்பதும்தான் இதற்கு முக்கியமான காரணங்கள். கணவரிடம் இதுபற்றி பேசுவதற்கு வெட்கப்படுதல், சொன்னால் அவமானப்படுத்தி விடுவாரோ என்று பயப்படுதல் என்று மனைவிகளின் தயக்கங்களும் தடைகள்தான். தொடர்ந்து உச்சக்கட்டம் அடைய முடியாமல் போகையில், `எந்த மகிழ்ச்சியும் இல்லாத இந்த உறவு எதற்கு’ என்று பெண்களுக்குத் தோன்றிவிடலாம். ஒரு சதவிகித பெண்களுக்கு உச்சக்கட்டம் அடைவதிலேயே சிக்கல் இருக்கும். உறவுக்குப் பிறகு `நீயும் சந்தோஷமா இருந்தியா’ என்று கணவர்கள் கேட்பதுதான், மனைவிகளின் `உச்சக்கட்டம் அடைய முடியாமை’ பிரச்னைக்கான முதல்கட்ட தீர்வு. உச்சக்கட்டம் அடைவதில் சிக்கல் இருந்தால் பாலியல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

எழுச்சியின்மை!

உறவின்போது கணவர்களுக்கு வருகிற எழுச்சி நிலைபோலவே மனைவிகளுக்கும் எழுச்சி நிலை உண்டு. அந்த நிலைதான் பெண்களை தாம்பத்திய உறவுக்குத் தயாராக்கும். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து அது பெண்ணுறுப்பிலும் வெளிப்படும்போதுதான், அங்கு வழுவழுப்புத்தன்மை ஏற்படும். உறவும் இனிமையாக இருக்கும். தன் உடல்மீதான தாழ்வு மனப்பான்மையில் ஆரம்பித்து கணவர்மீதான விருப்பமின்மை வரை ஏதோ ஒரு காரணத்தால், பெண் உணர்ச்சிவசப்படவில்லையென்றால் எழுச்சி நிலை இருக்காது. இது தொடர்ந்தால், பெண்ணுக்கு தாம்பத்திய உறவின்மீது விருப்பமின்மை வந்துவிடும்.

காமத்துக்கு மரியாதை

தாம்பத்திய உறவில் தன் விருப்பமே மனைவியின் விருப்பமும் என்று கணவர்கள் தீர்மானித்துவிடாமல், அவர்களின் விருப்பு, வெறுப்பு மற்றும் பிரச்னைகளையும் தெரிந்துகொண்டால், இரவுகள் இதமாக, இனிமையாக இருக்கும்” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

தொடர்ந்து மரியாதை செய்வோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.