நாசிக் அருகே பவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன: பல ரயில்கள் ரத்து

மும்பை: லோகமான்ய திலக் – ஜெயநகர் இடையே இயக்கப்படும் பவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள், நாசிக் அருகே நேற்று தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோகமான்ய திலக் ரயில் முனையத்தில் இருந்து ஜெயநகர் இடையே 1,958 கிமீ தொலைவுக்கு பவன் எக்ஸ்பிரஸ் எனப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கிழக்கு மத்திய ரயில்வேயால் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் சுமார் 3.10 மணியளவில் நாசிக் அருகே லகாவித் மற்றும் தவ்லாலி இடையே வரும்போது, இந்த ரயிலின் 10 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டன.  இதையடுத்து தகவலறிந்ததும், மருத்துவர்கள் அடங்கிய முதலுவி வண்டியும், மீட்பு குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ரயில்கள் தடம் புரண்டதால், 2 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு அவர்களின் நிலை இல்லை எனவும், உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை எனவும், ரயில்வே தகவல் தொடர்பு அதிகாரி கூறினார். ரயில் தடம் புரண்ட இடத்துக்கு அருகே தண்டவாளத்தில் ஒருவரின் சடலம் கிடந்தது. அவர் பயணி அல்ல என மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.