போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல் – 40,000 டன் அரிசியை அனுப்புகிறது இந்தியா: தலைநகர் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் குவிப்பு

போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க 40,000 டன் அரிசியை இந்தியா அனுப்புகிறது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இலங்கை அரசை கண்டித்து மாகாண சபைகள், உள்ளாட்சி அமைப்பு அமைச்சர் ரோஷன் ரணசிங்க நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த .வியாழக்கிழமை நள்ளிரவில் நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்பில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த சமூக வலைதளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிபர் தலைமையில் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் ஊரடங்கை அமல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 4-ம் தேதி காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. “அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே செல்லலாம். மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதி, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ஏதுவாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது” என்று இலங்கை அரசு விளக்கம் அளித் துள்ளது.

எனினும் ஊரடங்கை மீறி தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தலைநகர் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்டமாக 40,000 டன் அரிசி

இலங்கையின் உணவு தட்டுப் பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது.

தென்னிந்திய துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல்கள் மூலம் அரிசி அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் சரக்கு கப்பல்கள் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட 40,000 டன் டீசல் இலங்கையை சென் றடைந்துள்ளது.

இதுகுறித்து மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண ராவ் கூறியதாவது:

இலங்கைக்கு இந்தியாவால் மட்டுமே உதவ முடியும். இதர நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக எந்தவொரு பொருளையும் இலங்கைக்கு கொண்டு செல்ல பல வாரங்கள் தேவைப்படும். இந்தியாவில் இருந்து சில நாட்களில் இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்ப முடியும்.

முதல்கட்டமாக இந்தியாவில் இருந்து 40,000 டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் இலங்கையின் உணவுத் தட்டுப்பாடு குறையும். மேலும் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு தேவையான சர்க்கரை, கோதுமையும் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரிசி அரசியல்

கடந்த 1950 முதல் 1953 வரை கொரிய போர் நடைபெற்றது. அப்போது அமெரிக்காவின் எச்சரிக்கையால் மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கான ரப்பர் ஏற்றுமதியை நிறுத்தின. இந்த கால கட்டத்தில் இலங்கையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சீனா, இலங்கையுடன் கடந்த 1952 டிசம்பர் 18-ம் தேதி ரப்பர்- அரிசி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இதன்படி இலங்கையிடம் இருந்து கூடுதல் விலைக்கு ரப்பரை கொள்முதல் செய்த சீன அரசு, குறைந்த விலையில் இலங்கைக்கு அரிசி வழங்கியது. இதன்காரணமாக சீனா, இலங்கை இடையிலான நெருக்கம் அதிகரித்தது. கடந்த 1982-ல் ஒப்பந்தம் ரத்தான நிலையிலும் இரு நாடுகளின் உறவு வளர்ந்து வருகிறது. அண்மையில் இலங்கைக்கு சென்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்ல உறுதி அளித்தார்.

கரோனா, உக்ரைன் போரால் இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு 3 லட்சம் டன் அரிசியை வழங்க இந்தியா உறுதி அளித்துள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 1952-ம் ஆண்டில் இலங்கைக்கு சீனா உதவியது. தற்போது முதல் நாடாக இலங்கைக்கு இந்தியா அரிசியை அனுப்ப உள்ளது. இந்த “அரிசி அரசியலால் இந்திய, இலங்கை உறவு மேலும் வலுவடையும். சீனா பின்னுக்கு தள்ளப்படும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.