தொடரும் வோல்ஃப் பேக், நோபிள் ஆதிக்கம்… போர்க்களம் தொடரில் கோல் மழை!

நேரு ஸ்டேடியத்தில் கடந்த வாரம் தொடங்கிய போர்க்களம் கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தன. சனிக்கிழமை மதியம் நடந்த முதல் போட்டியில், தடம் எஃப்.சி அணி, YMSC அணியை எதிர்கொண்டது. நோபிள் கால்பந்து அகாடமிக்கு எதிரான முதல் போட்டியில் 1-4 எனத் தோற்றிருந்த தடம் எஃப்.சி, இந்தப் போட்டியைச் சிறப்பாகத் தொடங்கியது. YMSC அணி வெற்றி பெறும் என்று எல்லோரும் கருதியிருந்த நிலையில், 15-வது நிமிடத்தில் முன்னிலை பெற்றது தடம். அந்த அணியின் நரேஷ் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். 61-வது நிமிடத்தில் சூசை கோலடிக்க, 2 கோல்கள் முன்னிலை பெற்றது தடம் எஃப்.சி. கம்பேக் கொடுக்க எவ்வளவு முயற்சி செய்தும் YMSC அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அதனால், 2-0 என வென்று, தங்கள் புள்ளிக் கணக்கைத் தொடங்கியது தடம் எஃப்.சி. தங்கள் முதல் போட்டியில், YMSC அணி 2-1 என MAFFC அணியை வீழ்த்திருந்தது.

முதல் வாரம் தோல்வியடைந்திருந்த MAFFC அணிக்கு இரண்டாவது தோல்வியைப் பரிசளித்தது ஃபுயூச்சர் இந்தியா ஃபுட்பால் அகாடமி (FIFA). போட்டி முழுதும் ஆதிக்கம் செலுத்திய FIFA வீரர்கள், 4 கோல்கள் அடித்தனர். 24-வது நிமிடத்தில் FIFA வீரர் பிரவீன் குமார் கோல் கணக்கைத் தொடங்கிவைக்க, ஆறு நிமிடங்கள் கழித்து ஒரு அசத்தலான ஹெட்டர் மூலம் முன்னிலையை இரட்டிப்பாக்கினார் நந்த குமார். MAFFC அணிக்குப் பெரும் தலைவலியாக விளங்கிய நந்த குமார், அடுத்த ஆறு நிமிடங்களில் மீண்டும் ஒரு கோலடித்து போட்டியை 3-0 என்றாக்கினார். இரண்டு கோலோடு நிற்காமல், 67-வது நிமிடத்தில் இன்னொரு கோலையும் அடித்து ஹாட்ரிக்கை நிறைவு செய்தார். 4-0 என அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்திருக்க, 91-வது நிமிடத்தில் தன் அணிக்காக ஆறுதல் கோலடித்தார் அஜித் குமார். கடந்த வாரம் YMSC அணியிடம் 2-1 என்று தோற்றிருந்த போட்டியில், இந்த அணியின் கோலை அடித்ததும் அஜித் குமார் தான். இறுதியில் 4-1 என வெற்றி பெற்றது FIFA.

ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் எஃப்.சி.ரெவலேஷன் அணியை எதிர்கொண்டது நோபிள் கால்பந்து அகாடமி. தடம் எஃப்.சி அணிக்கெதிரான முதல் போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும் ஏபி தான் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார். என்ன, அந்தப் போட்டியில் ஆறாவது நிமிடத்தில் முதல் கோல் வந்தது. இந்தப் போட்டியில் 36-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. முதல் பாதியில் அதன்பிறகு கோலடிக்க முடியவில்லை என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே நோபிள் அணிக்கு இன்னொரு கோல் கிடைத்தது. கொடுக்கப்பட்ட பெனால்டியை கோலாக்கி ஆட்டத்தை 2-0 என்றாக்கினார் பிரேம் குமார்.

FC Revelation vs Noble Football Academy

56-வது நிமிடத்தில், அருண் மூலம் நோபிள் அகாடமி மூன்றாவது கோலையும் அடிக்க, மூன்றே நிமிடத்தில் கோல் கணக்கை தொடங்கும் வாய்ப்பு பெற்றது எஃப்.சி.ரெவலேஷன். பாக்சுக்குள் செய்யப்பட்ட ஃபவுலால், பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மோசமாக அடிக்கப்பட்ட ஷாட்டை, நோபிள் கோல்கீப்பர் சிஜோ மாத்யூஸ் தடுத்துவிட்டார். முந்தைய போட்டியைப் போல் இந்தப் போட்டியிலும் ஒரு ஸ்டாப்பேஜ் டைம் கோல் அடிக்கப்பட்டது. ஆனால், இதுவும் நோபிள் அணியிலிருந்து வந்ததுதான். 92-வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை 4-0 என முடித்தார் நிவாஸ்.

இரண்டு போட்டிகளில் இதுவரை 8 கோல்கள் அடித்திருக்கிறது நோபிள் கால்பந்து அகாடெமி.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வோல்ஃப் பேக் எஃப்.சி, யாவே எஃப்.சி அணிகளுக்கெதிரான போட்டியில் நான்காவது நிமிடத்திலேயே முதல் கோல் அடிக்கப்பட்டது. விஜய் துங்கா அடித்த கோலால், விரைவிலேயே முன்னிலை பெற்றது யாவே எஃப்.சி. கடந்த வாரம், எஃப்.சி.ரெவலேஷன் அணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்திருந்த வோல்ஃப் பேக் வீரர் ஆதில், 26-வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை சமனாக்கினார். அடித்தால், இரண்டு இரண்டாகத்தான் அடிப்பேன் என்று சபதம் எடுத்திருக்கும் ஆதில், 43-வது நிமிடத்தில் மீண்டும் கோலடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது வோல்ஃப் பேக் எஃப்.சி.

இந்த சீசனின் முதல் கோலை அடித்த யாவே ஸ்டிரைக்கர் ஞான பிரசாத், 51-வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை மீண்டும் சமனாக்கினார். ஆனால், வோல்ஃப் பேக் எஃப்.சி பின்தங்கவேயில்லை. 63-வது நிமிடத்தில் லோகேஷ் கோலடிக்க, 3-2 என முன்னிலை பெற்றது அந்த அணி. முதல் போட்டியில் லோகேஷும் 2 கோல்கள் அடித்திருந்தார். அடுத்த யாவே பதில் கோல் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருக்க, 75-வது நிமிடத்தில் வோல்ஃப் பேக் அணியின் நான்காவது கோலை அடித்தார் ரீகன். அதனால், பரபரப்பான அந்த ஆட்டம் 4-2 என முடிந்தது.

புள்ளிப் பட்டியலில் வோல்ஃப் பேக் எஃப்.சி முதலும், நோபிள் கால்பந்து அகாடமி இரண்டாவது இடமும் பிடித்திருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.