புதிய பிரதமர்: பாக்., எதிர்க்கட்சிகள் அறிவிப்பால் குழப்பம்!

பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று
பாகிஸ்தான்
பிரதமர்
இம்ரான் கான்
மீது குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன. இதனிடையே, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது கடந்த மாதம் 28ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார்.

இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற வேண்டுமானால் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 172 பேரின் ஆதரவை பெற வேண்டும். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக 200 எம்.பி.க்களும், இம்ரான் கானுக்கு ஆதரவாக 140 எம்.பி.க்களும் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. முன்னதாக, இம்ரான் அரசுக்கு ஆதரவளித்து வந்த முத்தாஹிதா குவாமி முவ்மென்ட்-பாகிஸ்தான் (எம்க்யூஎம்-பி) கட்சியின் 2 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியபோது, எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்வதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி அறிவித்தார். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தீர்மானம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 5க்கு எதிரானது என்பதால் அதை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார்.

பாக். நாடாளுமன்றம் கலைப்பு – 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல்!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தது செல்லாது. ஷெபாஸ் ஷெரீப்பை நாட்டின் புதிய பிரதமராக நியமிப்பதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களால் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட
ஷெபாஸ் ஷெரீப்
, அவையில் பேசினார். தொடர்ந்து பேசிய பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் ஷெர்ரி ரெஹ்மான், தங்களுக்கு 197 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகவும், நாடாளுமன்ற புதிய சபாநாயகராக பிஎம்எல்-என் கட்சி எம்.பி., ஆயாஸ் சாதிக்கை நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில், புதிய பிரதமரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஏப்ரல் 25ஆம் தேதி வரை பாகிஸ்தான் நாடாளுமன்றம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிப் ஆல்வி உடனடியாக அறிவித்துள்ளார், மேலும், தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த செய்திநாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுத்த அதிரடி முடிவு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.