'மவுனத்தைத் தவிர வேறு எதைக் கொண்டும் எங்களை ஆதரியுங்கள்' – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்

லாஸ் வேகாஸ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் தங்கள் நாட்டை மவுனத்தைத் தவிர வேறு எதைக் கொண்டு வேண்டுமானாலும் ஆதரியுங்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.

64வது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியின் பேச்சு அடங்கிய டேப் ஒளிபரப்பப்பட்டது. ஜான் லெஜண்ட்டின் ஃப்ரீ என்ற ஆல்பத்தை உக்ரைனிய பாடகர் மீக்கா நீயூட்டன், இசையமைப்பாளர் சியுசனா க்ளிடியன், கவிஞர் லியுபா யாகிம்சுக் ஆகியோர் இணைந்து பாடலைப் பாடுவதற்கு முன்னதாக ஜெலன்ஸ்கியின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது.

அதில் ஜெலன்ஸ்கி, “இசைக்கு எதிரானது எது தெரியுமா? மவுனம். அழிக்கப்பட்ட நகரங்கள், கொல்லப்பட்ட மக்கள் கொண்ட நகரங்கள். அங்கிருக்கும் மவுனம் தான் இசைக்கு எதிரானது. இன்று எங்களின் இசைக் கலைஞர்கள் கோட்சூட்டுக்குப் பதில் கவச உடை அணிந்து பாடுகின்றனர். காயமடைந்து மருத்துவமனைகளில் இருக்கும் மக்களுக்காகப் பாடுகின்றனர். அவர்களின் பாட்டு காயமடைந்தவர்களுக்கு கேட்காமல் இருக்கலாம். ஆனால், இசை எப்படியும் ஊடுருவி விடும். நாங்கள் உயிர்வாழும் சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம். எங்கள் தேசத்தில் ரஷ்யாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் குண்டுகளால் மயான அமைதியைக் கொண்டுவந்துள்ளனர். அந்த அமைதியை உங்கள் இசையால் நிரப்புங்கள். உங்கள் இசை மொழியில் எங்கள் துயரக் கதையைச் சொல்லுங்கள். உங்கள் சமூக வலைதளங்களிலும் கூட எங்கள் மீதான தாக்குதலைப் பற்றிய உண்மையைச் சொல்லுங்கள். எங்களை ஆதரியுங்கள். அதற்காக மவுனத்தைத் தவிர எதை வேண்டுமானாலும் கொடுங்கள். அப்போது அமைதி வரும்” என்று பேசியுள்ளார்.

தெருவில் சடலங்கள்.. உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறின. இதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். அப்போது அங்குள்ள தெருக்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

புச்சா நகரிலுள்ள ஒரு தெருவில் 20 ஆண்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று புச்சா மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்தார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. உக்ரைன் வீரர்கள் சடலங்களை தெருவில் போட்டுவிட்டு நாடகமாடுகின்றனர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.