#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ரஷிய தூதர்களை வெளியேற்ற ஜெர்மனி, பிரான்ஸ் முடிவு

05.04.2022

04.10  புச்சா நகரில் ரஷிய படைகள் நிகழ்த்திய படுகொலைகளுக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை வெளியேற்ற ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் பிரான்ஸ் அரசும் தனது நாட்டில் உள்ள 35 ரஷிய தூதர்களை வெளியேற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் ஆதரவு நாடுகளும் ரஷிய தூதர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

03:20: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள ரஷிய படைகளில் மூன்றில் இரண்டு பங்கு படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படையினர் பெலாரஸில் ஒருங்கிணைக்கப்பட்டு, உக்ரைனில் உள்ள வேறு பகுதிகளுக்கு அனுப்பப் படுவார்கள் என எதிர்பார்க்கப் படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
12.50: ரஷிய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அல்பேனிய பிரதமர் எடிராமா தெரிவித்துள்ளார். இது  போன்ற கொடூர குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் பொதுமக்கள் மீதான தாக்குதல் தமது நாட்டில் நடைபெற்ற போரை நினைவு படுத்துவதாக கொசோவோ பிரதமர் அல்பின்குர்தி குறிப்பிட்டுள்ளார்.

04.04.2022

22.30: உக்ரைனில் ரஷியப் படைகள் போர்க்குற்றம் செய்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வரும் நிலையில், ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷியாவை தற்காலிகமாக நீக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட் தெரிவித்தார்.

22.00: ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார். ‘புச்சா நகரில் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தீர்கள். புதின் ஒரு போர்க் குற்றவாளி ஆவார்’ என்றும் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறினார்.

16.30: ரஷிய படைகளால் உக்ரைன் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை அல்பேனியா மற்றும் கொசோவோ நாட்டின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த கொடூர கொலைகளுக்கு ரஷியாவை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று உலக நாடுகளை அவர்கள் வலியுறுத்தினர். 

15.30: புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுப்பதாகவும், இந்த விஷயத்தில் உக்ரைனின் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்குரியதாக கருதப்பட வேண்டும் என்றும் ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. 

12:30: ரஷியப் படைகள் புச்சா நகரத்தில் படுகொலை நிகழ்த்தியுள்ளது என உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த ரஷியா, இது உக்ரைனின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளது.

09:00: புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருப்பதற்கு ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புச்சா படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.