மாநில அரசுகளின் இலவச திட்டங்களால் இலங்கையின் அவலநிலை இந்தியாவுக்கும் ஏற்படலாம்: பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘தேர்தல் சமயத்தில் மாநில அரசுகள் அறிவிக்கும் இலவச திட்டங்களால், வரும் காலத்தில் இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடலாம்’ என பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ஒன்றிய அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் துறை செயலாளர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கர திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பேசியுள்ளனர். குறிப்பாக பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, ஆந்திரா, மேற்குவங்கம் ஆகியவற்றில் மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் பொருளாதார ரீதியாக நிலைக்கத்தக்கவை அல்ல என்று மோடியிடம் அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக மூத்த செயலாளர்கள் கூறியதாவது: இலவச திட்டங்களால் மாநிலங்களின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி செல்கிறது. ஒன்றிய அரசு உதவவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும். மாநில நிதிநிலைமையை சீரமைக்காமல் இலவச திட்டங்களை தொடர்ந்தால் இலங்கை, கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டது போன்ற பெரும் பொருளாதார நெருக்கடியை அத்தகைய மாநில அரசுகள் சந்திக்க நேரிடும். பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகளின் இலவச அறிவிப்புகள் செயல்படுத்த முடியாதவை. இதற்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க முடியவில்லை. சமீபத்திய தேர்தல்களின் போது உத்தரபிரதேசம், கோவாவில் வாக்காளர்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் மற்றும் இதர பொருட்களை வழங்குவதாக பாஜ வாக்குறுதி அளித்தது. சட்டீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறை மாற்றப்பட்டதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். மாநில அரசுகள் வறுமையை ஒழிப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், எல்லாப் பிரச்னைகளிலும் தேசியக் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்பதால், குழுவாக செயல்பட வேண்டும் என்று எங்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறி உள்ளனர்.பிரதமருடன் ஜெய்சங்கர் அவசர சந்திப்பு: இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திப்பதோடு, அந்நாட்டு அரசுகளும் இக்கட்டான நிலையில் உள்ளன. கடந்த வாரம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபா் கோத்தபய ராஜபக்சே, பிரதமா் மகிந்தா ராஜபக்சே, நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்து பொருளாதார பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெய்சங்கர், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாகிஸ்தானின் அரசியல் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதில், அண்டை நாடுகளுக்கு எந்த வகையில் இந்தியா உதவ முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.