அழிவை நோக்கி உலகம் : உடனே இதை செய்ய வேண்டும்., Dr. அன்புமணி இராமதாஸ் அதிர்ச்சி செய்தி.!

அழிவை நோக்கி உலகம்: காலநிலை மாற்ற அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவுக்கு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகவும், இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே  உலகம் பேரழிவுகளை சந்திக்கும் என்றும் ஐ.நா. காலநிலை மாற்ற  அமைப்பு எச்சரித்திருக்கிறது. உலகம் முழுவதும் புவியைக் காப்பதற்கு ஆதரவான குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த புரிதலும், அக்கறையும் இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவது கவலையளிக்கிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (Intergovernmental Panel on Climate Change – IPCC) என்ற பெயர் கொண்ட அந்த அமைப்பு ‘காலநிலை மாற்றம் 2022: காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. 65 நாடுகளைச் சேர்ந்த 278 விஞ்ஞானிகள் இணைந்து தயாரித்துள்ள அந்த அறிக்கையில் மிகவும் கசப்பான உண்மைகள் இடம் பெற்றுள்ளன. உலகைக் காக்க வேண்டுமானால், கரியமில வாயு வெளியேற்றப்படும் அளவை 2030-ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என்பது தான் அந்த உண்மையாகும்.

2010-19 இடையிலான பத்தாண்டுகளில் வெளியான கரியமில வாயு அளவு தான் வரலாறு காணாத உச்சம் ஆகும். 1850 முதல் 2009 வரையிலான 160 ஆண்டுகளில் 1990 ஜிகா டன் கரியமில வாயு    வெளியேற்றப்பட்டது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில், 410 ஜிகா டன், அதாவது அதற்கு முந்தையை  160 ஆண்டுகளில் வெளியேற்றப்பட்டதில் ஐந்தில் ஒரு பங்கு வெளியேற்றப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தையும், அதன் விளைவான புவிவெப்பநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த வேண்டுமானால் 2020 முதல் இனிவரும் ஒட்டுமொத்த எதிர்காலத்திலும் 410 ஜிகா டன் கரியமில வாயுவை மட்டும் தான் வெளியேற்ற வேண்டும் என்று ஐ.நா. வல்லுனர் குழுவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், ஒட்டு மொத்த எதிர்காலத்திலும் வெளியேற்ற வேண்டிய அளவு கரியமில வாயுவை கடந்த பத்தாண்டுகளில் வெளியேற்றியிருக்கிறோம் என்பதிலிருந்தே, கரியமில வாயு வெளியேற்றத்தை எந்த அளவுக்கு குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதை 2025&ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்தி, அதன் பிறகு  குறையச் செய்ய வேண்டும்; 2030ஆம் ஆண்டில் இது 2010-ஆம் ஆண்டின் அளவை விட 45% குறைவாகவும், 2050&ஆம் ஆண்டுக்குள் பூஜ்யமாகவும் குறைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தான் உலகம் அழிவதை கட்டுப்படுத்த முடியும். உலக நாடுகள் நினைத்தால் இது சாத்தியமாகக் கூடிய பணி தான்.

புவிவெப்பநிலை அதன் இயல்பான அளவிலிருந்து இப்போது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. அதை 1.5%க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாரிஸ் உடன்பாட்டின் மையக்கரு ஆகும். ஆனால், 2021 கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்றினால் கூட வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இது ஆபத்தானது.

நிலக்கரி& பெட்ரோலியப் பயன்பாட்டை குறைத்தல், அனைவருக்கு தூய ஆற்றல் கிடைக்கச் செய்தல், நகரமயமாக்கலை மாற்றியமைத்தல், வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துதல், கட்டடங்கள் அமைக்கும் முறையில் மாற்றம், போக்குவரத்தில் மாற்றம், தொழிற்சாலைகளை தூயமுறைக்கு மாற்றுதல், நிலப்பயன்பாட்டில் மாற்றம் ஆகியவற்றை உடனடியாக செய்தால் மட்டும் தான் பேரழிவை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் ஐநா நீடித்த இலக்குகளை அடைதல்; மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துதல்; வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும்.

ஐ.நா.அமைப்பின் இந்த வழிகாட்டுதலை பின்பற்றத் தவறினால் பேரழிவிலிருந்து நாம் தப்ப முடியாது. புவிவெப்பமயமாதல் காரணமாக நாம் எதிர்கொண்டு வரும் பெரும் வறட்சி, அனல் காற்று, பெரும் வெள்ளம், அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், பொருளாதார பாதிப்பு ஆகியவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். இதை தடுப்பதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும்  காலநிலை மாற்ற அவசர நிலையை உடனடியாக அறிவித்து, அதன்படி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது தான் என்பதை அரசுகள் உணர வேண்டும்.

புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இதை செய்ய வேண்டும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், காலநிலை மாற்ற அவசர நிலை இன்னும் அறிவிக்கப்பட வில்லை. உலக அளவில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 18 நாடுகளும் 2100 நகராட்சிகளும் காலநிலை மாற்ற அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்கக்கூடாது.

எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையும், அனைத்து நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சிகளும், பொது அமைப்புகளும், பெரு நிறுவனங்களும் காலநிலை மாற்ற அவசர நிலையை உடனே பிறப்பிக்க வேண்டும்; புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை செயல் திட்டத்தை ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.