இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொழில் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியுள்ள கொரியா

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கொரியக் குடியரசின் அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் கூ யுன்-சியோல், 2022 ஏப்ரல் 01ஆந் திகதியாகிய இன்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்தார்.

சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற மதிய போசன விருந்தின் போது, இருதரப்பு உறவுகளின் முழுமையான வரம்பு மற்றும் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் கீழ் கடன் உதவிகள் மற்றும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் ஊடாக உதவிகளை வழங்குவதன் ஊடாக இதுவரை வழங்கப்பட்டுள்ள மகத்தான ஆதரவிற்காக கொரிய அரசாங்கத்திற்கு இலங்கையின் ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், மருந்து உற்பத்தி, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கழிவுகளை அகற்றுதல், எரிசக்தி, தொழில்நுட்பம், தொழில் பயிற்சி மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பாக இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்ததுடன், பரஸ்பரம் நன்மை பயக்கும் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு இரு தரப்பும் இணைந்து செயற்பட ஒப்புக்கொண்டன. கொரியாவில் வேலைவாய்ப்பு அனுமதி முறையின் கீழ் சுமார் 22,000 புலம்பெயர் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். இலங்கையர்களுக்கு இனிமையான தொழில் சூழலை வழங்கி, அவர்களது நலனில் அக்கறை செலுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் கூ யுன்-சியோல் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி ஒதுக்கீடுகளுக்காக கொரியாவின் முன்னுரிமை நாடுகளில் ஒன்றாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். கொரியக் குடியரசின் அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சருடன், அரசியல் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர், அபிவிருத்தி மதிப்பீடு மற்றும் முகாமைத்துவத்திற்கான பணிப்பாளர் நாயகம், பொதுத் தொடர்புகளுக்கான பிரதமரின் செயலாளர், இலங்கைக்கான கொரியத் தூதுவர், கொரியக் குடியரசின் பிரதமர் அலுவலகம் மற்றும் கொழும்பில் உள்ள கொரியத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு விஜயம் செய்த கொரியக் குடியரசின் அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீதியமைச்சர் அலி சப்ரி, திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண மற்றும் இலங்கையில் உள்ள கொரிய வர்த்தகர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2022 ஏப்ரல் 05

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.