இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி கொண்டது.

இதையடுத்து அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் ரத்து செய்யப் பட்டது. இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார். இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்குமாறு இம்ரான்கானை அவர் கேட்டுக்கொண்டார்.

இதனால் புதிய அரசு அமையும் வரை அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

இம்ரான்கானின் 3-வது மனைவி புஷ்ராபீவியின் நெருங்கிய தோழியாக விளங்கி வருபவர் பரக்கான். இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் உயர் பதவிகளில் பணி நியமனம் தொடர்பாக பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் துணைதலைவர் மரியம் நவாஸ் இம்ரான்கான் மற்றும் அவரது 3-வது மனைவி உதவியுடன் பரக்கான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இம்ரான் கான் தற்போது நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் புதிய அரசு அமைந்தால் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என பரக்கான் அச்சம் அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இவரது கணவர் அஸ்கான் ஜமுல்குசார் ஏற்கனவே அமெரிக்காவுக்கு தப்பி சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.