கோவையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் ஆய்வு அறிக்கை வெளியீடு…

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழகஅரசு அதற்காக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டுக்கு வரும்போது நாள் ஒன்றுக்கு 3.71 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று தெரிவித்து உள்ளது.

`கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுப் பணிகள் நடந்துவந்த நிலையில், கோவை மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை தயாராக இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் கூறியிருந்தார்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பலர் கருத்து தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பொதுமக்கள் எத்தனை பேர் பயன்படுத்துவார்கள்? இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்குநர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியகூறுகள் குறித்து சிஸ்ட்ரா ரைட்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு அறிக்கை தயாரித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

கோவையில் 42.9 சதவீதம் பேர் பொது போக்குவரத்தான பஸ்களை பயன்படுத்துகிறார்கள். 41.5 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்தையும், 10.3 சதவீதம் பேர் சொந்த கார்களையும், 5.3 சதவீதம் பேர் டாக்சிகளையும் பயன்படுத்துகிறார்கள். 92 சதவீத வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு பைக் அல்லது ஸ்கூட்டர் வைத்துள்ளனர். 14 சதவீதம் பேர் சைக்கிளையும், 19 சதவீதம் பேர் சொந்தமாக கார் வைத்துள்ளனர்.

எனவே, பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு சாதகமான சூழ்நிலை கோவையில் உள்ளன என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவையில் மொத்தம் 138.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. அதில், முதல் கட்டமாக வெள்ளலூரிலிருந்து பிஎஸ்ஜி பவுண்டரி மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் 31.7 கிலோ மீட்டர் தூரத்துக்கும், கோவை கலெக்டர் அலுவலகத்திலிருந்து வலியம்பாளையம் பிரிவு வரை 14.1 கி.மீ. தூரத்துக்கு என மொத்தம் 45.8 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

2ம் கட்டமாக கோவை ரயில் நிலையத்திலிருந்து பாப்பம்பட்டி பிரிவு வரை 13 கி.மீ. தூரம், கோவை ரயில் நிலையத்திலிருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை 18.1 கி.மீ. தூரம் என மொத்தம் 31.1 கி.மீ. தூரத்துக்கும்,

3ம் கட்டமாக பிஎஸ்ஜி பவுண்டரியிலிருந்து கணியூர் வரை 9.2 கி.மீ. தூரம், வலியம்பாளையம் பிரிவு முதல் கணேசபுரம் வரை 10.5 கி.மீ. தூரம், பாப்பம்பட்டி பிரிவு முதல் காரணம்பேட்டை வரை 11.8 கி.மீ. தூரம், பெரியநாயக்கன்பாளையம் முதல் பிளிச்சி வரை 7.8 கி.மீ. தூரம், டவுன் ஹால் முதல் காருண்யா நகர் வரை 22.7 கி.மீ. தூரம் என 62 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

கோவையில் 2025ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் போது வெள்ளலூர்-உக்கடம், பிஎஸ்ஜி பவுண்டரி-விமான நிலையம் வரை உள்ள பாதைகளில் 2.37 லட்சம் பேரும், கலெக்டர் அலுவலகம் முதல் வலியம்பாளையம் பிரிவு வரை 1.34 லட்சம் பேரும் ஆக மொத்தம் 3.71 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் தினமும் பயணம் செய்வார்கள் என்று ஆய்வு அறிக்கையில் தோராயமாக கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2030ம் ஆண்டு முழுமையாக செயல்பாட்டு வரும்போது,   4.05 லட்சம் பேரும், 2035ம் ஆண்டில் 5.31 லட்சம் பேரும், 2045ம் ஆண்டில் 5.98 லட்சம் பேரும், 2055ம் ஆண்டில் 6.79 லட்சம் பேரும் பயணம் செய்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களை இரவில் நிறுத்துவதற்கான டெப்போ மற்றும் ரயில் நிலையம் புதிதாக கட்டப்பட்டு வரும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அருகில் அமைக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.