சாம்பியன்ஸ் லீக்: அத்லெடிகோ மாட்ரிட் அரணை உடைத்த டி புருய்னா, ஃபோடன் கூட்டணி!

சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் முதல் லெக் போட்டிகளை வென்றிருக்கின்றன. பென்ஃபிகா அணியுடன் மோதிய லிவர்பூல் 3-1 என வெற்றி பெற்றது. அத்லெடிகோ மாட்ரிட்டை 1-0 என வீழ்த்தியது பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி.

போர்ச்சுகலின் எஸ்டாடியோ டு லாஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் எதிர்பார்த்ததைப் போலவே லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தியது. தொடக்க நிமிடங்களில் பென்ஃபிகா வீரர்களுக்குப் பெரும் தலைவலியாக விளங்கினார் லிவர்பூல் அட்டாக்கர் சாடியோ மனே. தொடர் அட்டாக்குகளின் பலனாக, ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இடது பக்கமிருந்து ராபர்ட்சன் அனுப்பிய அந்த கிராஸை, சிறப்பாக ஹெட்டர் செய்து கோலாக்கினார் டிஃபண்டர் இப்ராஹிமா கொனாடே. லிவர்பூல் அணிக்காக அவர் அடிக்கும் முதல் கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கோலுக்குப் பிறகு லிவர்பூல் இன்னும் அதிரடியாக அட்டாக் செய்தது. அவ்வப்போது பென்ஃபிகாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், ஸ்டிரைக்கர் டார்வின் நூனஸுக்கு உறுதுணையாக யாரும் செயல்படாததால், அவர்களால் கோலடிக்க முடியவில்லை. ஹோம் டீமுக்குத் தொடர்ந்து தலைவலியாக விளங்கி வந்த சாடியோ மனே, 34-வது நிமிடத்தில் ஸ்கோர் போர்டில் இடம் பெற்றார். அலெக்சாண்டர் ஆர்னால்ட் கொடுத்த அற்புதமான லாங் பாஸை, ஹெட்டர் மூலம் கோல் போஸ்ட் நோக்கி அனுப்பினார் லூயிஸ் டியாஸ். அங்கு நின்றிருந்த மனே, அதை எளிதாக கோலாக்கினார். முதல் பாதி 0-2 என முடிவுக்கு வந்தது.

இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பதில் கோல் திறுப்பியது பென்ஃபிகா. 49-வது நிமிடத்தில், விங்கிலிருந்து ரஃபா சில்வா அனுப்பிய ‘லோ கிராஸை’ கொனாடே சரியாக கிளியர் செய்யாமல் போக, அந்த வாய்ப்பை கோலாக்கினார் நூனஸ். ஆட்டம் 1-2 என்றானது. அதன்பிறகு இரண்டு அணிகளும் கோல் போட முயற்சித்தாலும், அடுத்த கோலை லிவர்பூல் தான் பதிவு செய்தது. ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் அந்த அணியின் மூன்றாவது கோலை அடித்தார் லூயிஸ் டியாஸ். நபி கீட்டா பந்தை மீட்டு, அற்புதமாக ஒரு த்ரூ பால் போட, கோல்கீப்பரை மடக்கி கோலடித்தார் டியாஸ். இறுதியில் 3-1 என வெற்றி பெற்றது லிவர்பூல். இரண்டாவது லெக் போட்டி ஏப்ரல் 14-ம் தேதி நடக்கிறது.

Liverpool vs Benfica

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் சிட்டி vs அத்லெடிகோ மாட்ரிட் போட்டி எடிஹார் மைதானத்தில் தொடங்கியது. எதிர்பார்த்ததைப் போலவே, பெப் கார்டியோலாவின் அட்டாக்கை, தன் அரணால் தடுத்துக்கொண்டே இருந்தார் டீகோ சிமியோனி. முதல் பத்து நிமிடங்கள் ஆட்டம் மந்தமாகச் சென்றாலும், அதன்பிறகு மான்செஸ்டர் சிட்டியின் கை ஓங்கியது. கெவின் டி புருய்னா, ஆய்மெரிக் லபோர்ட், ரியாத் மாரஸ் என அடுத்தடுத்து கோல் முயற்சிகளை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 70 சதவிகிதம் போட்டி மான்செஸ்டர் சிட்டி அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அத்லெடிகோ மாட்ரிட் அணி, தங்கள் தடுப்ப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியது. அவே கோல்கள் இல்லை என்பதால், கோல் அடிப்பதைப் பற்றிக் கவலையில்லாமல் தங்கள் திட்டத்தை செயல்படுத்தி வந்தனர் அந்த அணி வீரர்கள். மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் தொடர்ந்து பிரஸ் செய்துகொண்டே இருந்ததால், அவர்களால் அதிக நேரம் பந்தை அவர்கள் வசம் வைத்திருக்கவும் முடியவில்லை. அத்லெடிகோவின் அரணை சிட்டியால் உடைக்க முடியாமல் போக, முதல் பாதி 0-0 என முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதி தொடங்கியதும் சில அட்டாக்குகள் மேற்கொண்டது அத்லெடிகோ மாட்ரிட். ஆனால், அவர்களால் சரியாக ஃபினிஷ் செய்ய முடியவில்லை. ஆட்டம் ஒரு மணி நேரம் முடிந்த பிறகு, 3 மாற்றங்கள் செய்தார் சிமியோனி. கேப்டன் கொகே, நட்சத்திர வீரர் மார்கோஸ் யொரன்டே ஆகியோரை வெளியே எடுத்தது சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இருந்தாலும், சிமியோனியின் ஆட்ட முறை வீரர்களை சீக்கிரம் சோர்வடையவைத்துவிடும் என்பதால், இந்த முடிவைப் புரிந்துகொள்ள முடிந்தது.

Manchester City vs Atletico Madrid

அத்லெடிகோவின் இந்த மாற்றங்கள் நடந்து முடிந்து 8 நிமிடங்கள் கழித்து, பெப் கார்டியோலாவும் 3 மாற்றங்கள் செய்தார். கேபிரியல் ஜீசுஸ், ஃபில் ஃபோடன், ஜேக் கிரீலிஷ் என மூன்று அட்டாக்கர்களை களமிறக்கினார். இந்த மாற்றங்களோ இரண்டே நிமிடத்தில் பலன் கொடுத்தது. 70-வது நிமிடத்தில், ஃபில் ஃபோடன் கொடுத்த அற்புதமான த்ரூ பாலை, பாக்சுக்குள் நுழைந்த டி புருய்னா கோலாக்கினார். அதனால், மான்செஸ்டர் சிட்டி என முன்னிலை பெற்றது. அதன்பிறகும் சில முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டது சிட்டி. குறிப்பாக டி புருய்னா அடிக்கடி அத்லெடிகோ கோல் போஸ்டை முற்றுகையிட்டார். ஆனால், அதற்கு மேல் கோல்கள் எதுவும் அடிக்க முடியவில்லை. அதனால், இந்த ஆட்டம் 1-0 என முடிவுக்கு வந்தது. இந்த அணிகள் மோதும் அடுத்த சுற்று ஆட்டமும் ஏப்ரல் 14-ம் தேதி நடக்கிறது.

இன்று நள்ளிரவு நடக்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் செல்சீ அணி ரியல் மாட்ரிட்டையும்; வியரல், பேயர்ன் மூனிச்சையும் எதிர்கொள்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.