BB Ultimate 66: உக்கிரமாக டாஸ்க் ஆடிய பாலா; `நான் மட்டும் கேம்ல இருந்திருந்தா…' அனிதாவின் அனத்தல்!

அல்டிமேட் சீசனைக் கடைசி வாரத்திலாவது சுவாரஸ்யப்படுத்தலாம் என்று ஒரு புதிய போட்டியாளர் களத்தில் இறங்கியிருக்கிறார். அது பிக் பாஸேதான். ஆம், நேற்றைய எபிசோட் சற்றாவது சுவாரஸ்யம் அடைந்ததற்கு பிக் பாஸின் சேட்டைகளும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இன்னொரு பக்கம் டெரர் முகத்தையும் பிக் பாஸ் காட்டினார். அவருக்கு என்னதான் ஆச்சு?!

நாள் 65-ல் நடந்தது என்ன?

‘சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்’ என்று காலையில் ஒலித்த அட்டகாசமான பாடலுக்கு பரதநாட்டியம் அறிந்த அபிராமி இன்னமும் கூட சிறப்பாக ஆடியிருக்கலாம். ஆனால் ரம்யா ஆடியதில் இருந்த நளினம் கூட அபிராமியிடம் இல்லை. காலையிலேயே வேண்டாத ஒரு காரியத்தில் இறங்கினார் அனிதா. ஆனால் இது பின்னால் பெரிய பிரச்னையாகும் என்பதை அவர் அப்போது உணரவில்லை.

BB Ultimate 66

அனிதா செய்த அத்துமீறல் – டென்ஷன் ஆன பிக் பாஸ்

Restricted Area பகுதியில் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்த அனிதா, அங்கிருந்த வாட்டர் பெட்டில் உற்சாகமாக படுத்துக் கொண்டார். “நான் இப்ப கெஸ்ட்தான். போட்டியாளர் இல்லை” என்கிற காரணத்தை அவரே பெருமிதமாக சொல்லிக் கொண்டார். அனிதாவைப் பார்த்ததும் நிரூப்பும் ஷாரிக்கும் உற்சாகமாகச் சென்று அவருடன் சேர்ந்து கொண்டார்கள். “எனக்கு வேணாம்ப்பா… அப்புறம் பிக் பாஸ் தண்டனை கொடுப்பாரு” என்று மறுத்த ரம்யாவையும் வலுக்கட்டாயமாக கொண்டு போய் படுக்கையில் போட்டார்கள். “எனக்கும் ஆசையாத்தான் இருக்கு… ஆனா பிக் பாஸ் மேல மரியாதை இருக்கு. அவர் வேணாம்ன்னு சொன்ன விஷயத்தை நான் செய்ய மாட்டேன்” என்று தாமரை ஒதுங்கிக் கொண்டது புத்திசாலித்தனம்.

விருந்தினர்களான ஷாரிக் மற்றும் அனிதாவிற்கு ஒரு காலை டாஸ்க். “நான் வீட்டில் இருந்திருந்தால் இவர்களை விடவும் சிறப்பாக விளையாடியிருப்பேன்” என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அது வீட்டில் உள்ள அனைவருமாகவும் இருக்கலாம். அபிராமி, ஜூலி மற்றும் தாமரை ஆகிய மூவரைக் குறிப்பிட்ட ஷாரிக், “நானா இருந்தா ஜாலியா, சுவாரஸ்யமா, சிறப்பா டாஸ்க்ல விளையாடியிருப்பேன். குறிப்பா ஒரு டாஸ்க்ல பாலாவை ஈஸியா ஜெயிக்க விட்டுட்டாங்க. நான் இருந்திருந்தா அப்படி விட்டிருக்க மாட்டேன்” என்றார்.

ஆனால் அடுத்து வந்த அனிதாவோ “நான் யாரையும் ஹர்ட் பண்ண விரும்பலை. இவங்களோட கடைசி வார சந்தோஷத்தை கெடுக்க விரும்பலை. அவங்களும் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டிருக்காங்க” என்று கரிசனையுடன் சொன்னது நல்ல விஷயம். என்றாலும், “நான் இருந்திருந்தா டாப் 5-ல வந்திருப்பேன். டான்ஸ் டாஸ்க்ல பிச்சி உதறியிருப்பேன். வக்கீல் டாஸ்க்ல கலக்கியிருப்பேன்” என்று பெருமிதப்பட்டுக் கொண்டார் அனிதா. (எனில் கோர்ட்ரூம் டாஸ்க் நாலைந்து எபிஸோடுகளாக போயிருக்கும்!). பிறகு வந்த ஒரு சாவகாசமான தருணத்தில், “நிரூப் உன்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காம பேசினான். அனிதா என் பிரெண்டுன்னு பல இடத்துல வெளிப்படையா சொன்னான்” என்று அனிதாவிடம் நிரூப்பின் நல்லியல்பைப் பற்றி ரம்யா சொல்ல, அனிதாவின் முகத்தில் பெருமிதம் ஓடியது. “பாசக்காரப்பய நீ. அதை மறைக்காதடா” என்று நிரூப்பிடம் அனிதா சிணுங்க “அப்படில்லாம் எனக்கு பாசம் இல்லை” என்று செல்லமாக நடித்தார் நிரூப்.

BB Ultimate 66

பிக் பாஸிற்கு என்னதான் ஆச்சு?

ரம்யாவை வாக்குமூல அறைக்கு அழைத்த பிக் பாஸ் சரமாரியாக பல டோஸ்களை விட்டார். தடை செய்யப்பட்ட இடத்தில் சில போட்டியாளர்கள் அத்துமீறி நுழைந்து சிறப்புப் படுக்கையில் படுத்த விஷயம் தொடர்பான கண்டிப்பு இது. “பிக் பாஸ்… என்னை பலவந்தமா தூக்கிட்டுப் போயிட்டாங்க” என்று தயங்கிய புன்னகையுடன் ரம்யா சொல்ல, “தெரியும்… ஆனா விளையாட்டா இருந்தாலும் விதிமுறைகளை மீறாம இருக்கணும். ‘மக்கள் பார்க்கறாங்க… என் இமேஜ் முக்கியம்’ன்னு சொல்லிட்டு இப்படி விதிமுறைகளை மீறுகிற விஷயங்களைச் சிலர் செய்யலாமா?” என்று பிக் பாஸ் கோபமாக சொல்லியது அனிதாவிற்கான உள்குத்து என்பது நன்றாகவே புரிந்தது.

ஜூலி, அனிதா என்றால் மட்டும் பிக் பாஸ் சற்று காண்டுடன் நடந்து கொள்வது மாதிரியே தெரிகிறது. அதே சமயத்தில் பிக் பாஸ் அப்படியொன்றும் சிடுமூஞ்சியும் அல்ல. ஒருவேளை இவர்கள் ஓவராக ஏதாவது அட்ராசிட்டி செய்திருப்பார்களோ?!

BB Ultimate 66

“யாரும் பார்க்காம இருக்கறப்பவும் கடைப்பிடிக்கறதுக்கு பேருதான் ஒழுக்கம். நான் வேடிக்கையா பேசறதுதான் உங்களுக்கு பிரச்னைன்னா… அப்படிப் பேசறதை இனி நிறுத்திக்கறேன்” என்றெல்லாம் பிக் பாஸ் கறாராகச் சொன்ன போது நமக்கே சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அசட்டுத்தனமான புன்னகையும், தர்மசங்கடமும் முகத்தில் வழிய பிக் பாஸின் ஆட்சேபத்தைக் கேட்டுக் கொண்ட ரம்யா, பிறகு வெளியே வந்தவுடன் அனைவரையும் அழைத்து சபையிலும் இதைச் சொல்ல, அந்தத் தர்மசங்கடம் மற்றவர்களின் முகத்திலும் பரவியது. “மன்னிச்சுடுங்க பிக் பாஸ்” என்று கோரஸாக கத்தினார்கள். அனிதாவை மட்டும் ஸ்பெஷலாக குத்திய பிக் பாஸ், ரம்யாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற நிரூப் மற்றும் ஷாரிக்கின் அட்ராசிட்டி பற்றித் தனியாக ஏதும் சொன்னாரா என்று தெரியவில்லை. “டாஸ்க்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் போது திரையை விலக்கி எட்டிப் பார்க்கக்கூடாது” என்பதும் பிக் பாஸின் கடுமையான ஆட்சேபம்.

கொடி டாஸ்க்கில் கொலைவெறியைக் காட்டிய பாலா

‘என் கொடி பறக்குது’ என்கிற தலைப்பில் அடுத்த டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ஒரு வட்டமான கயிற்றுக்குள் அனைத்து போட்டியாளர்களும் இருக்க வேண்டும். வெவ்வேறு முனைகளில் அவரவர்களுக்கான புகைப்படம் பொறித்த கொடி இருக்கும். மற்றவர்களை மீறி கயிற்றை இழுத்து அந்தக் கொடியை எடுத்து சிறிய கம்பத்தில் ஒட்ட வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வருபவர் வெளியேறுவார். ஆட்டம் ஆரம்பித்தது. டாஸ்க் என்று வந்துவிட்டாலே பாலாவிடம் உக்கிரம் புகுந்து விடும். எனவே பெண்கள் இருக்கிறார்களே என்றெல்லாம் கூட பார்க்காமல் ஆவேசமாக இழுத்துச் சென்றதில் முதலில் அபிராமி கீழே விழுந்தார். பிறகு நடந்த தள்ளுமுள்ளுவில் தாமரையின் முகத்தில் பலமாக அடிபட ‘அய்யோ…’ என்று கத்திக் கொண்டே விழுந்தார். முதல் சுற்றில் பாலாதான் கொடியை முதலில் ஒட்டினார்.

BB Ultimate 66

“பாவியளா… கொலை பண்ணப் பார்க்கறீங்களா?” என்று வலியில் அலறிய தாமரையை ஓரமாக அமர வைத்து முதலுதவி செய்தார்கள். இந்தச் சுற்றில் தாமரை வெளியேறினார். புல் தரையாக இருந்தாலும் கூட அதன் சூடு தாங்காமல் கதறிய அபிராமி, பிறகு ஷூவை மாட்டிக் கொண்டு வந்தார்.

BB Ultimate 66

இரண்டாவது சுற்றிலும் பாலாவின் ஆவேசம் தொடர, பலரும் தடுமாறி விழுந்ததில் இந்த முறை ரம்யாவின் காலில் பலமாக அடிபட்டது. இந்தச் சமயத்தில் பாலா செய்த விஷயம் ரசிக்கத்தக்கதாக இல்லை. ரம்யா வலியால் கதறினாலும், கயிற்றை விடாமல் இழுத்துச் சென்றார் பாலா. மற்றவர்கள் பதறி கத்தினார்கள். “டாஸ்க் போயிட்டு இருக்கு… தாமரை அக்கா விழுந்த போது மட்டும்…” என்று பாலா சொன்னதில் இருந்து ரம்யாவின் மீதிருந்த கோபம் அம்பலப்பட்டது. எதிராளியிடம் தோற்கும் கடைசித்தருணமாகவே இருந்தாலும் கூட, அவனுக்கு அடிபட்டால் ஓடிச் சென்று உதவுவதுதான் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப். இந்த இடத்தில் பாலா சற்று பொறுமையாக நடந்திருக்கலாம். ஓரமாக அமர வைக்கப்பட்ட ரம்யா, “யாரும் என் காலைத் தொடாதீங்க” என்று வலியால் கதறிக் கொண்டிருந்த போது கூட “நீ கொடியை ஒட்டிட்டியா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் பாலா. (உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?!).

நடக்க முடியாத ரம்யாவை அலேக்காக தூக்கிக் கொண்டு மருத்துவ அறைக்குச் சென்றார் நிரூப். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு ஆட்டம் தொடர்ந்தது. என்னதான் பாலாவை விடவும் நிரூப் உயரமாக இருந்தாலும், பாலாவின் வலிமைக்கு முன்னால் நிரூப் சற்று பின்தங்கித்தான் போகிறார். மூன்றாவது சுற்றில் பாலாவை முந்திக் கொண்டு நிரூப் தன் வலிமையைக் காட்ட, ஜூலி வெளியேறினார். நான்காவது சுற்றிலும் ஆவேசம் குறையாமல் பாலா செயல்பட, எதிர்முனையில் வலுவாகத் தாக்குப்பிடித்தார் நிரூப். அவர் மட்டும் இல்லையென்றால் அபிராமிக்கும் நிச்சயம் அடிபட்டிருக்கும். இந்தச் சுற்றில் நிரூப் வெளியேறினார். எனில் முடிவு எப்படியிருக்கும் என்பது இப்போதே தெரிந்துவிட்டது. கடைசி சுற்றில் அபிராமியை மிக எளிதாக இழுத்துச் சென்று, வேடிக்கை காட்டிவிட்டு, பிறகு வெற்றி பெற்றார் பாலா. இதற்கு மாறாகக் கடைசிச் சுற்றில் பாலாவும் நிரூப்பும் மோதியிருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

BB Ultimate 66

‘தாடி பாலாஜி ரீஎன்ட்ரி – இப்பவாவது ஏதாவது சுவாரஸ்யமா செய்யுங்க’

‘வலி மாமே… வலி…’ என்கிற பாட்டு மெயின் கேட் அருகில் ஒலிக்க, மக்கள் புதிய விருந்தினரை வரவேற்க உற்சாகமாகத் தயாரானார்கள். கையில் பரிசுப் பொதியுடன் வந்தவர் தாடி பாலாஜி. அனைவரையும் உற்சாகமாகத் தழுவிக் கொண்ட பாலாஜி, காலில் அடிபட்டு உள்ளே படுத்திருந்த ரம்யாவையும் விசாரித்தார். பிறகு அனைவரையும் அழைத்து தாமரைக்காக தான் வாங்கி வந்திருந்த பச்சை நிறப் புடவையைப் பரிசளிக்க, அம்மணிக்கு ஏக குஷி. பாசத்துடன் பாலாஜியைக் கட்டிக் கொண்டார் தாமரை.

BB Ultimate 66

தாடி பாலாஜியை வரவேற்ற பிக் பாஸ் “இந்த வீட்டுக்கு வந்திருக்கறவங்க தக்காளி வெட்டவும் தூங்கவும் மட்டும்தான் செய்யறாங்க… நீங்களாவது சுவாரஸ்யமா ஏதாவது செய்யுங்க” என்றார். பாலாஜி உள்ளே போட்டியாளராக இருந்த போதே ஏதும் செய்யவில்லை. பின்னே எந்த நம்பிக்கையில் இதை பிக் பாஸ் கேட்கிறார் என்று தெரியவில்லை. இது அனிதாவிற்கான உள்குத்தோ என்று தோன்றியது. இது பிக் பாஸின் குறும்பான கமென்ட்டாக இருக்கலாம். ஆனால் ‘விருந்தினர்களாக’ வந்திருப்பவர்களுக்கு இப்படி நெருக்கடி தரத்தேவையில்லை என்று தோன்றுகிறது. சிறப்பு படுக்கையில் போய் படுத்ததும், விருந்தினர் என்கிற அந்தஸ்த்தில் சுதந்திரமாக இருப்பதும் அத்தனை பெரிய குற்றமா? நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அப்படியா நாம் நடத்துவோம்?! பிக் பாஸிற்கு என்னதான் ஆச்சு?

ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. நாம் ஒரு வீட்டிற்கு விருந்தினராக சென்றாலும் கூட அவர்களின் பிரைவைட் பெட்ரூமில் அனுமதியில்லாமல் நுழைந்துவிட மாட்டோம். அதுதான் நாகரிகமும் கூட. தடை செய்யப்பட்ட பகுதிக்குச் செல்வதற்கு முன்னால் அனிதா இதைப் பற்றி சற்று யோசித்திருக்கலாம். இதைப் போலவே என்னதான் கெஸ்ட் என்றாலும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் சேர்க்கவே அவர்கள் உள்ளே வரவழைக்கப்படுகிறார்கள். எனவே வந்த காரணத்தை செம்மையாக முயல்வதுதான் சிறப்பு.

BB Ultimate 66

கோலாகலமாக நடந்த ஹோலி திருவிழா

‘சதுரங்க வேட்டை’ என்று அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ். கார்டன் ஏரியாவில் செஸ் போர்டு போன்ற செட்அப் இருக்கும். காய்களுக்குப் பதிலாக மனிதர்கள் கறுப்புச் சதுரங்களில் நகர வேண்டும். முன்னே மட்டுமே நகர முடியும். இதற்கான டாஸ்க் அறிவிப்பை வாசித்த அனிதா பிறகு நிரூப்பிடம் நெடுநேரத்திற்கு அனத்திக் கொண்டிருந்தார்.

“பைனல்ல இருக்க வேண்டிய பொண்ணு நான்… என் கெரகம்… இப்படி கெஸ்ட்டா வந்து தக்காளி வெட்டிட்டு இருக்கேன். அதுக்கும் பிக் பாஸ் கிட்ட இருந்து திட்டு கிடைக்குது…” என்பது போல் புலம்பிய அனிதா, “பாலா என் போட்டியாளர்தான். ஆனா அவன் கூட நான் வெளியே போகணும்னு நெனக்கல… அப்படின்னா நான் ஃபைனல் நிக்க தகுதி இருக்கறவதானே. டாஸ்க்கை படிக்கும் போது விளையாட முடியலையேன்னு மனசு வலிக்குது” என்றெல்லாம் அனிதா புலம்புவது டூ லேட். ‘இந்த வீட்டில் நான் இருந்தால்’ என்று காலையில் தந்த டாஸ்க்கை இப்போதும் செய்து கொண்டிருக்கிறார் அனிதா. செஸ் விளையாட்டு ஆரம்பித்தது. காலில் அடிபட்டிருப்பதால் “எனக்குப் பதிலா அனிதா விளையாடட்டும்” என்று பிக் பாஸை கேட்டுக் கொண்டார் ரம்யா.

BB Ultimate 66

போட்டியாளர்களைக் கலாய்த்த பிக் பாஸ்

இந்த செஸ் டாஸ்க்கின் பெரும்பான்மையான சுவாரஸ்யம் பிக் பாஸால்தான் நடந்தது. “இவங்களை நம்பினா வேலைக்கு ஆகாது” என்று அவரே களத்தில் இறங்கிவிட்டார். தாடி பாலாஜியை வண்ணப்பொடி எடுத்து வருவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டார். முதல் சுற்றிலேயே தாமரை அவுட். அடுத்த சுற்றில் பாலா அவுட் ஆகி விட “பாலா முகத்துல கலர் பொடியை பூசுங்க” என்று அவுட் ஆக்கிய ரம்யாவிற்கு உத்தரவிட்டார் பிக் பாஸ். “தாமரைதானே முதல்ல அவுட் ஆனாங்க… அவங்களை விட்டுட்டு எனக்கு மட்டுமா?” என்று சிணுங்கினார் பாலா. “ஏற்கெனவே நமக்கும் பாலாவிற்கும் வாய்க்கா தகராறு இருக்கு.. எதற்கு வம்பு?” என்று சிறிதளவு பொடியை மட்டுமே ரம்யா வலிக்காமல் பூசி விட “ஆசிர்வாதம் பண்ற மாதிரி இருக்கு” என்று நிரூப் சொன்ன கமென்ட்டை அப்படியே வழிமொழிந்த பிக் பாஸ் “நல்லா பூசி விடுங்க” என்று உற்சாகப்படுத்தினார்.

அடுத்த சுற்றில் ஜூலி அவுட் ஆகிவிட அவரை வண்ணப்பொடியில் முக்கியெடுத்தார் நிரூப். “இதே மேக்அப்பை தாமரைக்கும் போட்டு விடுங்க” என்று பிக் பாஸ் உத்தரவிட ‘தான் மட்டும் தப்பித்தோம்’ என்று நிம்மதியாக அமர்ந்திருந்த தாமரை ‘அய்யாங்… வேணாம்” என்று சிணுங்கினாலும் நிரூப் விடவில்லை. கால் கிலோ பவுடரை எடுத்து அப்பி தாமரையை அம்மன் வேஷத்திற்கு மாற்றினார்.

BB Ultimate 66

அடுத்த சுற்றில் நிரூப், அனிதா ஆகிய இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டார் அபிராமி. எந்தப் பக்கம் நகர்ந்தாலும் அவுட். செக்மேட். “நிரூப் வேண்டாம்… கொடூரமா பூசுவான்…” என்று தீர்மானித்த அபிராமி, அனிதா பக்கம் அவுட் ஆக, அப்போதும் நிரூப் விடவில்லை. கடைசி சுற்றில் அனிதா அவுட் ஆக ரம்யாவின் சார்பில் வண்ணப்பொடி அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார் அனிதா. ‘இருடா மகனே… டாஸ்க் முடியட்டும்’ என்று கொலைவெறியுடன் காத்துக் கொண்டிருந்த அனைவரும் நிரூப்பின் மீது பவுடருடன் பாய, அவருக்குத்தான் அதிக டேமேஜ். இந்த டாஸ்க் மிக ஜாலியாக நடந்து முடிந்தது.

மெயின் கேட்டில் மீண்டும் பாட்டுச் சத்தம். வசீகரமான தோற்றத்தில் உள்ளே நுழைந்தார் அபிநய். (இவரது பெயரே சட்டென்று மறந்துவிட்டது). ‘சோகாமா’ என்கிற ரகளையான பாடல் ஒலிக்க, அபிநய்யுடன் சேர்ந்து மற்றவர்களும் நடனம் ஆடினார்கள். ‘நான் இருந்திருந்தால்’ என்கிற டாஸ்க்கை மீண்டும் தூசுத் தட்டினார் பிக் பாஸ். விருந்தினர்கள் பேச வேண்டும்.

BB Ultimate 66

முதலில் வந்தவர் அபிநய். “விவாதம் செய்கிற டாஸ்க்கில் தாமரை எமோஷனல் ஆகிவிட்டார். சைக்கிள் டாஸ்க்கில் நிரூப் சுயநலமாக நடந்து கொண்டுவிட்டார். ‘சார்ந்து விளையாடுகிறார்’ என்று அபிராமி மீது சொல்லப்படுகிறது. இதை அவர் தைரியமாக கடந்து வந்திருக்கலாம்” என்று பட்டியலிட்ட அபிநய், அவர் இருந்திருந்தால் இதை இன்னமும் சிறப்பாக கையாண்டிருப்பாராம்.

தேர்வில் தோற்றுப் போன மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்தால் “எக்ஸாம் அன்னிக்கு சுரம் வந்துடுச்சு சார்… அது மட்டும் இல்லைன்னா மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்திருப்பேன்” என்றுதான் சாக்கு போக்கு சொல்லுவார்கள். அது போலத்தான் இருக்கிறது இந்த ‘நானாக இருந்தால்’ டாஸ்க்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.