உயர்நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி – மருத்துவர் இராமதாஸ் மகிழ்ச்சி.!

எம்.பி.பி.எஸ்: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும்: உயர்நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.50% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. மாணவர் நலன் காக்கும் இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்வியில் 7.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளின் மாணவர்களுடன் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிட முடியாத நிலை இருப்பதை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று கூறியுள்ளது. அத்துடன் இந்த சட்டத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு சமூகநீதியை பாதுகாக்கும் தீர்ப்பு என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.

மருத்துவக் கல்வி என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது. இதற்குக் காரணம் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு என்பது பள்ளிப்பாடத்திட்டத்தைக் கடந்து, தனிப்பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது தான். 

நீட் தேர்வுக்கு குறைந்தது 2&3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்தப் பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தது ரூ.5 லட்சம் வரை செலவாகக் கூடும். நகர்ப்புற, பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது சாத்தியம். ஆனால், கல்விக்கட்டணம் செலுத்தவும், சீருடைகள் மற்றும் பாடநூல்கள் வாங்கவும்  வசதியில்லாத அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு இவ்வளவு செலவு செய்வது சாத்தியமற்றதாகும்.

கல்வி மற்றும் சமூகநிலையில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களை முன்னேற்றுவதற்காக  சாதி அடிப்படையில் எவ்வாறு செங்குத்து (Vertical) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, அதே போல் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கோட்டு (Horizontal) இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமான நிகர்நோக்கு (Affirmative action) நடவடிக்கை என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது. 

கடந்த காலங்களிலும் கிராமப்புற மாணவர்களுக்கு இத்தகைய இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதே அடிப்படையில் தான் இப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இது மிகச்சரியான நடவடிக்கையே.

நீட் தேர்வு இல்லாத காலத்திலும் மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. இதற்கும் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் தான் காரணமாகும். 

அதனால், ஒருபுறம் உயர்நீதிமன்றம் கூறியுள்ளவாறு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித் தரத்தையும் மேம்படுத்துவதுடன், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் கூட, தனியார் பள்ளிகளுக்கு இணையான   கட்டமைப்பு வசதிகள் அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய இட ஒதுக்கீடு தொடரப்படுவதை  அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.