ராமர் பிறக்காமல் இருந்திருந்தால் பாஜக எப்படி வளர்ந்திருக்கும்?- உத்தவ் தாக்கரே சரமாரி கேள்வி

மும்பை: ராமர் பிறக்காமல் இருந்திருந்தால், பாஜக அரசியலில் எந்த பிரச்சினையை எழுப்பி வாக்கு வாங்கியிருக்கும், அந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்து இருக்கும் என்று எண்ணி பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறினார்.

கோலாப்பூர் வடக்கு தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸைச் சேர்ந்த மஹா விகாஸ் அகாடியின் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பதற்காக நடந்த பிரச்சாரத்தில் மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

வெவ்வேறு சித்தாந்தங்களைப் பிரச்சாரம் செய்யும் பாஜகவைப் போலல்லாமல் சிவசேனா எப்போதுமே காவிக்கொடியிலும் இந்துத்துவாவிலும் எப்போதும் உறுதியாக உள்ளது. ஆனால் பாஜகவோ தனது அடையாளத்தை மறைத்து பாரதிய ஜனசங்கம், ஜனசங்கம் போன்று வெவ்வேறு பெயர்களைக் கொண்டதாகவே இருந்தது.

காவி மற்றும் இந்துத்துவா ஆகியவற்றின் கலவையானது மத்தியில் ஆட்சியை அடைய உதவும் என்று மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே தான் பாஜகவுக்குக் காட்டினார். பாஜக இந்துத்துவாவுக்கு காப்புரிமை வைத்திருக்கவில்லை. காவி மற்றும் இந்துத்துவா அவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் என்பதை பாஜகவுக்கு காட்டியவர் எனது தந்தை பால்தாக்கரே தான். இதனை அவர்கள் மறந்து விட்டனர்.

ராமர் பிறக்காமல் இருந்திருந்தால், பாஜக அரசியலில் எந்த பிரச்சினையை எழுப்பி வாக்கு வாங்கியிருக்கும், அந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்து இருக்கும் என்று எண்ணி பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பதால் அந்த கட்சி மதம் மற்றும் வெறுப்பு பற்றி பேசுகிறது.

பால்தாக்கரேயை மதிப்பதாக பாஜக கூறினால், வரவிருக்கும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கும் திட்டத்தை அந்தக் கட்சி ஏன் எதிர்க்கிறது.

2019 ஆம் ஆண்டில் இதே தொகுதியில் சிவசேனா வேட்பாளர் தோல்வியடைந்ததற்கு பாஜகவே காரணம். அப்போது இரு கட்சிகளும் கூட்டணி வைத்திருந்தாலும் தேர்தலில் பாஜகவினர் அப்போது காங்கிரஸுக்கு ஆதரவாக பணியாற்றினர்.

2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2019 தேர்தலில் கோலாப்பூர் வடக்கில் காங்கிரஸின் வாக்குகள் அதிகரித்தன. இதன் விளைவாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் சிவசேனாவின் வேட்பாளர் தோல்வியடைந்தார். 2019-ல் பாஜகவின் வாக்குகள் எங்கே போனது?

2019 தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸுடன் பாஜக மறைமுக கூட்டணி வைத்திருந்ததா என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

நான் கோயிலாகக் கருதும் பாலாசாகேப் பால்தாக்கரேயின் அறையில் வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2019 தேர்தலில் சேனாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் பாஜக ஏன் பின்வாங்கிவிட்டது. .

2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறாததால் சிவசேனாபாஜக கூட்டணியில் பிளவுக்கு வழிவகுத்தது. இதற்கு பாஜக தலைவர்களின் செயல்பாடுளே காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.