கேட்சை கோட்டை விட்ட ஷமி… முகம் சுழித்த கேப்டன் பாண்டியாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

 IPL 2022 Tamil News: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி முதல் கோலாகலமாக அரங்கேறி வருகிறது. பல சுவாரஷ்யங்களுடன் நடந்த வரும் இத்தொடரின் நேற்றைய 21-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சை செய்யவே, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

குஜராத் அணியில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 50 ரன்கள். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்துவீச்சாளர்கள் நடராஜன், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டையும், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா – கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி வலுவான அடித்தளத்தை அமைக்க, நிக்கோலஸ் பூரன் – ஐடன் மார்க்ரம் ஜோடி அணியை அசத்தலான வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி 2வது வெற்றியை ருசித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 57 ரன்களும், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 42 ரன்களும் எடுத்தனர்.

கேட்சை கோட்டை விட்ட ஷமி… கடிந்து கொண்ட கேப்டன் பாண்டியா:

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸின் 13வது ஓவரை கேப்டன் பாண்டியா வீசினார். அவர் வீசிய 2வது மற்றும் 3வது பந்தை வில்லியம்சன் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டார். இதனால் கடுப்பாகி இருந்தார் கேப்டன் பாண்டியா. இந்த தருணத்தில் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்து குஜராத் அணிக்கு குடைச்சல் கொடுத்து வந்த ரகுல் திரிபாதியை ஆட்டமிழக்க செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

கேப்டன் பாண்டியா வீசிய கடைசி பந்தை ரகுல் திரிபாதி அப்பர் கட் அடிக்க முயற்சித்தபோது, ​​அது டீப் தேர்ட் மேனை நோக்கிப் பறந்து சென்றது. அந்த இடத்தில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரும், மூத்த வீரருமான முகமது ஷமி நின்றிருந்தார். பந்தை பார்த்த அவர், அதை பிடிக்க ஒரு அடி பின்னோக்கி வந்து ‘ஒன் பிட்ச் கேட்ச்’ பிடித்தார்.

ஆனால், ஷமி முயற்சித்து இருந்தால், முன்னோக்கி நகர்ந்து சென்று அந்த பந்தை கேட்ச் பிடித்து இருக்கலாம். பந்து பவுண்டரி போகக் கூடாது என நினைத்த அவர் அவ்வாறு செய்திருக்கலாம். ஷமி கேட்ச் பிடிக்க முயற்சி செய்யாததை பார்த்த கேப்டன் பாண்டியா மேலும் கடுப்பாகி முகம் சுழித்து கடிந்து கொண்டார். இது ஆட்டத்தின் போது ஒளிபரப்பாகிய ரீப்ளேயில் தெரிந்தது.

கேப்டன் ஹர்திக் பாண்டியா மூத்த வீரர் ஷமியை கடிந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் கேப்டன் பாண்டியாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.