கைப்பேசியோடும் வாழக் கற்போம்! | பெற்றோருக்கான உளவியல் வழிகாட்டி

கொரோனாவை எப்படி முற்றிலும் ஒழிக்க முடியாதோ அதுபோல குழந்தைகளின் கைகளில் செல்போன் தவழ்வதையும் முற்றிலும் ஒழிக்க முடியாது. கொரோனா தீநுண்மியின் பிரவேசத்தால் பலியானோர் ஒரு புறமிருக்க, ஆன் லைன் வகுப்புகளை சாக்காக வைத்து கைப்பேசி மூலம் தேவையற்றதையும் கற்று மனச்சிதைவுக்கு ஆளாகும் அடுத்தடுத்த தலைமுறைகளைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே எனத்தான் பாடத் தொன்றுகிறது. ’கைப்பேசி படிப்பைக் கெடுக்கும்’ என்பது போய், கைப்பேசி மூலம் கல்வி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. திடீரென்று எப்படிக் குழந்தைகள் இந்தத் தலைகீழ் மாற்றத்தை ஆரோக்கியமாக ஏற்றுக் கொள்ள முடியும்? இதுதான் இன்று சமூவியலாளர்களின் ஒரே கேள்வி.

மன அழுத்தம் (Stress) என்ற சொல் அங்கெங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து சிறுவர் முதல் முதியவர் வரை சர்வ சாதாரணமாக உபயோகிப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளி மாணவன் ஆசிரியரை தாக்கிய செய்தியும், ஆசிரியையை அவமானப் படுத்திய செய்தியும் ஆங்காங்கே நிகழக் காரணம் என்ன? தகுதிக்கு மீறிய ,சக்திக்கு மீறிய பிரமாண்டமான எதிர்பார்ப்புகளும் (Great Expectations) அதனால் கிடைக்கும் பெரும் ஏமாற்றங்களும்தாம்.

Mobile phone in hands (Representational Image)

மன அழுத்த மேலாண்மையின் (Stress Management) முதல் படி என்ன? வள்ளுவம் கூறுகிறது

‘ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்’

‘எக்காலத்திலும் நிறைவேறாத தன்மையுடைய அவாவை ஒழித்தலே நிரந்தரமான இன்ப வாழ்வைத் தரும்.’ என்பதே அதன் பொருள்.

இதையேதான் திருமூலர் ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்கிறார். ஆசையே அழிவிற்குக் காரணம் என்கிறார் புத்தர்.

சைக்கோ செக்ஸுவல் அனாலிஸிஸ் என்ற சிக்மன்ட் ப்ராய்டின் ‘ஃப்ராய்டிசம்’ சொன்ன ஜீன்தான் (மரபணுக்கள்தாம்) மனிதனின் சமுதாய வளர்ச்சிக்குக் காரணம் என்ற கோட்பாட்டை, சைக்கோ சோஷியல் அனாலிஸ் என்ற கோட்பாட்டுப் படிநிலைகளின் மூலம் உடைத்தெறிந்தார் எரிக் எரிக்ஸன்.

குழந்தைகளின் மனம்

குழந்தைகள் இயற்கையில் வேறுபட்டிருக்கின்றன. ஒரு குழந்தையின் மனம் போல் மற்றொரு குழந்தையின் மனம் இருப்பதில்லை. உலகப் புகழ் பெற்ற பவுலோ கோய்லோ (Paulo Coelho) தன் அல்கெமிஸ்ட் என்ற புதினத்தில் ‘Each human being is unique, each with their own qualities, instincts, forms of pleasure and desire for adventure’ என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்கிறார்.

பொதுவாக குழந்தைகளின் மனம் வெண்மையான ஆடைபோல களங்கமற்றதாகும். நெருங்கிப் பழகுவோரின் செயலை ஒட்டியே குழந்தையின் மனம் அமைகிறது. நற்குணமுள்ள பெரியோரின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளின் மனத்தில் தூய்மை, நேர்மை, குற்றமற்ற செயல்பாடுகள் ஆகியன இயல்பாகப் படிந்துவிடுகிறது. அதன் பயனாய் மரியாதையாகப் பேசுதல், மற்றவரை மதித்தல், பண்பாகப் பழகுதல் போன்ற சிறந்த குணங்களால் மிளிர்கின்றன.

மாறாக குற்றம் நிறைந்த பேச்சோ செய்கையோ அந்தக் குழந்தைகளுக்கு முன் நிகழுமாயின் குழந்தைகளும் அதையே பின் பற்றி நடக்கத் துவங்கிவிடுகின்றன.

சமூக உளவியல் கோட்பாட்டின் (Psycho social Analysis) தந்தையான ‘எரிக் எரிக்ஸன்’ என்ற உளவியலாளரின் குழந்தையின் சராசரி வயது, அந்த வயதில் காணப்படும் பேராண்மை. உளச் சமூக முரண்பாடுகள், உறவு முறைகள், வாழ்வு பற்றிய கேள்வி எனத் துருவி ஆய்ந்துள்ளார்.

உணவும் மனமும்

எரிக் எரிக்ஸனின் கோட்பாட்டின்படி ஒரு குழந்தை பிறந்தது முதல் 18 மாதங்கள் வரை தாயின் பொறுப்பே அதிகம். குழந்தைக்குப் பார்த்துப் பார்த்து பால் புகட்டுதல், உணவளித்தல், தின் பண்டம் வழங்கல், தண்ணீர் குடிக்க வைத்தல் போன்றவற்றை அதன் தாய் குழந்தையின் நன்மையை நினைத்து (தன் சோம்பலைத் கருதாமல்) காலம் தவறாமல் அளித்து வந்தால் குழந்தையின் மனப்போக்கு நேர்மறையாகவும், இந்த உலகின் மேல் நம்பிக்கையும் அதற்கு ஏற்படும். மாறாக தாயாரால் பதினெட்டு மாதங்களில் சரியாகப் பராமரிக்கப்படாவிடில் எதிர்மறை எண்ணங்களும் அவநம்பிக்கையுமாகத்தான் அந்தக் குழந்தை சமுதாயத்தில் வளரும்.

உடல் ஆரோக்கியமே மன ஆரோக்கியத்தின் ஆதாரம் என்பர். இதையே கிரேக்க தத்துவஞானி தாலஸ், ரோமானியக் கவிஞர் ஜுவினல் ஆகியோர் Physical health and Mental health ae intertwined. Seeking the ideal of a Sound Mind in a Sound Body என்று உரைக்கின்றனர்.

கழிவறைப் பயிற்சியும் மனமும் (Toilet Training)

18 மாதத்திற்கு மேல் 3 வயதிற்குள் குழந்தைக்கு கழிவறைப் பயிற்சியளித்துவிடல் அவசியம். இந்தப் பருவத்தில் தாய் தந்தை இருவரின் பொறுப்பும் அதிகரிக்கிறது. அதோடு தானாக தன் உடைகளை உடுத்தவும் பயிற்சி அளிக்கப்படவேண்டும. குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை கழிவரைக்கு அழைத்துச் சென்று பழக்கினால் Body Clock என்று சொல்லக்கூடிய Circadian Rhythm செய்யும் தூண்டுதல் துலங்கல்கள் அடிப்படையில் ஒரு சில நாட்களிலேயே பழகிவிடும். தன்னாட்சி (Autonomy) குணம் படியும். மாறாக சரியாகப் பழகாத குழந்தைகள் பிற்காலத்தில் கூச்ச சுபாவமும் சந்தேக குணமும் (Shame & Doubt) உள்ளவர்களாகி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.

விளையாட்டும் மனமும்

வயது 3 – 5 முன் பள்ளிப் பருவம் (Pre School Age) என்று வரையறுக்கிறது குழந்தை உளவியல் கோட்பாடு. இந்தப் பருவத்தில் Exploration என்கிற ஆய்வு மனப்பான்மையும் தேடல் குணமும் அதற்கு மிகையாகிறது. குழந்தை தான் விளையாடும் பொம்மைக் குழந்தையை தட்டிக் கொடுத்து… ’பயப்படாதே, அழாதே… பால்குடி… நான் ஒரு கதை சொல்லட்டுமா?’ என்றெல்லாம் பொம்மையோடு பேசியது எனில் அந்தக் குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளர்கிறது என்பதை நாம் உணரலாம். மாறாக ’சாப்பிட மாட்டியா?’ என்று கடிந்து பொம்மையைத் தூக்கி வீசியது எனில் அது ஆரோக்கியமற்ற சூழலில் வளர்கிறது என்பதை அறியலாம். இந்த நிலையில் உளவியலாளர் அறிவுரையின்படி பெற்றோர்கள் தங்கள் வன்மையான குணங்களை விட்டு மென்மையாகப் பழக ஆரம்பித்தால் குழந்தைகள் நேர்வழிக்கு வந்துவிடும். மோசமான சூழலை குழந்தைகள் இந்தப் பருவத்தில் சுலபமாக மறந்துவிடும். “குழந்தைகள் மறதி” என்று பேச்சு வழக்கில் சொல்லும் பருவமும் இதுதான்.

தனித்திறமையை வெளிப்படுத்தும் மனம்

வயது 5-12 துவக்கப் பள்ளி செல்லும் பருவம். ஆசிரியர் மற்றும் பெற்றோர் குழந்தையின் தனித்திறனைக் கண்டுபிடித்து ஊக்குவிக்கும்போது தன் திறமையை அது வளர்த்துக் கொள்ளும். மாறாக எதிர்மறையாக விமரிசனம் செய்துவிட்டாலோ அதற்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். இந்த நேரத்தில் பெறும் அனுபவங்கள்தாம் குழந்தைகளை அடுத்த உயர் பள்ளி, மேல்நிலைப் பள்ளிப் பருவத்திலும் தொடர்ந்துவிடும் மிக மிக எச்சரிக்கையாக குழந்தைகளைக் கையாளவேண்டிய நேரம் இது.

Kids

இந்தப் பருவத்திலிருந்துதான் இப்போது பெரிய சிக்கல் உருவாகியிருக்கிறது. கைப்பேசி தொழில்நுட்பத்தில் ஞானம் பெற்றவர்கள் குழந்தைகள் (பெரியவர்களே சிறுவர்களைக் கேட்டு பலவற்றை கற்றுக் கொள்ளும் நிலை) குரங்கு கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்துவிட்டாற்போல், குழந்தைகளின் கைகளில் கைப் பேசியைக் கொடுத்திருக்கிறோம்.

பெற்றோர்களால் எல்லா நேரமும் குழந்தைகளையே கவனித்துக்கொண்டிருக்க முடியுமா? முடியாதுதான். அவர்களுக்கும் பிழைப்பு இருக்கிறதே…

கிடைக்கும் தனிமையை, குழந்தை எப்படிக் கழித்தது. எதையெல்லாம் கற்றுக் கொண்டது. பசு மரத்து ஆணி போல எதை மனதில் பதித்தது? இவை உடனடியாக விடை கண்டுபிடிக்கமுடியாத வினாக்கள்.

தனித்தன்மையை வெளிப்படுத்தும் மனம்

வயது 13-19 ல், தனித்தன்மையை வெளிப்படுத்தத் துடிக்கும் பதின்ம வயதில் ஆசிரியர், பெற்றோர், சமூகம், மீடியாக்கள் அனைத்துமே அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு பெற்றாலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் பங்கே இங்கு அதிகமாக உள்ளது. தீநுண்மியோடு வாழக் கற்றுக் கொள்வதைப் போல , கைப்பேசியுடன் ஆரோக்கியமாய் வாழ குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

படிப்பைத் தவிர வேறு ஒன்றும் பார்க்கக் கூடாது என்று கண்டிப்பாக பெற்றோர் இருந்தால், குழந்தைகள் சுலபத்தில் ஏமாற்றிவிடும். மாறாக சின்ன சின்ன அறிவை வளர்க்கும் விளையாட்டுக்கள், நீதிக் கதைகள், விடுகதைகள், கார்டூன்கள் என அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க அனுமதிக்கும்போது குழந்தைகள் பெற்றோர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபடுவார்கள்.

ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் ஆன்லைன் வகுப்பைத் தொடங்கும்போது ஒரு சின்ன நீதிக்கதையோடு தொடங்குவதும், பாடத்தின் நடுவே நல்லொழுக்கக் கருத்துக்களையும், நீதிக் கதைகளையும், தன் சொந்தக் குழந்தைக்குச் சொல்வதைப் போல் அக்கரையுடனும் ஆர்வத்துடனும் ஊட்டி குழந்தைகள் மனம் தகாதனபால் திரும்பாமல் காப்பாற்றி, உழைப்பு, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பொறுப்பு.. போன்ற விழுமியங்களை உணரச்செய்து மாணவர்களை உயர்த்துவதன் மூலம் இந்த நாட்டை உயர்த்தத்தான் ஆசிரியர்கள் தங்களை அர்பணிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

Kids (Representational Image)

பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் வளர்ச்சி என்பது தனி மனித வளர்ச்சி அல்ல. இந்த சமூகத்தின் வளர்ச்சி. ஆசிரியப் பெருமக்களின் அர்பணிப்பை உணர்ந்து அவர்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள்.

– ஜூனியர் தேஜ் (கட்டுரையாளர் – உளவியல் ஆலோசகர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.