செய்தியாளர் சந்திப்பு தாமதத்திற்கு காரணம் கூறிய யாஷ் – நெட்டிசன்கள் அளித்த பதில்

‘கேஜிஎஃப் 2’ பட புரமோஷனுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடிகர் யாஷ் விசாகப்பட்டினம் சென்றநிலையில், அங்கு வெகுநேரம் தெலுங்கு செய்தியாளர்களை காத்திருக்க வைத்ததற்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் உருவான ‘கே.ஜி.எஃப்.’ படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி, மாபெரும் வரவேற்பு பெற்றதுடன், கன்னட திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து, இந்தக் கூட்டணி ‘கே.ஜி.எஃப். 2’ படத்தை உருவாக்கி வந்தது.

இந்தப் படத்திற்கு பான் இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில், கொரோனா காரணமாக படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்தது. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரம் 14-ம் தேதி ‘கே.ஜி.எஃப். 2’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

image

திரையரங்குகளில் படம் வெளியாவதை முன்னிட்டு புரமோஷன் செய்யும் வகையில் படக்குழு, மும்பை, ஹைதராபாத், திருப்பதி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில், விசாகப்பட்டினத்தில் நடந்த செய்தியாளார்கள் சந்திப்புக்கு, நடிகர் யாஷ், இயக்குநர் பிரசாந்த் நீல் உள்ளிட்ட படக்குகுவினர், ஒன்றரை மணிநேரம் தாமதமாக வந்தனர். இதனால் கோபமடைந்த செய்தியாளர்கள், நடிகர் யாஷிடம் ஏன் எங்களை ஒன்றை மணிநேரம் காத்திருக்க வைத்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த நடிகர் யாஷ், “உங்களை காத்திருக்க வைத்திருந்ததற்காக மனதார மன்னிப்பு கோருகிறேன். யார் எங்கு அழைத்தாலும், நான் சென்று வருகிறேன். நிகழ்ச்சி 10 நிமிடங்கள் தாமதமாக தொடங்கினாலும், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கேட்டப்பிறகுதான், நான் தாமதமாக வந்த விஷயம் எனக்கு தெரியவந்துள்ளது.

image

நேரத்தின் அருமை எனக்கு புரிகிறது. பட புரமோஷனுக்கு தனியார் விமானங்களில் வருவதால், அந்த விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் தாமதமாகிறது. உங்களை காத்திருக்க வைத்ததற்காக நான் வருந்துகிறேன்” என்று தெரிவித்தார்.

ஆனால் நெட்டிசன்களோ நடிகர் யாஷ் பழிக்கு பழி வாங்கிவிட்டதாக தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘புஷ்பா’ பட புரமோஷனுக்காக, பெங்களூருவில் நடந்த கன்னட செய்தியாளர் சந்திப்புக்கு, தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூன் தாமதமாக சென்றதாகக் கூறப்படுகிறது. அதேபோல், கன்னட நடிகரான யாஷ், ‘கே.ஜி.எஃப். 2’ பட புரமோஷனுக்காக, விசாகப்பட்டினத்தில் தெலுங்கு செய்தியாளர்களை காத்திருக்க வைத்து, பழிக்கு பழி வாங்கிவிட்டதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.