தொடர்ந்து மிரட்டல்!: சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் துறந்த ஆர்யன் ஷ்யாம்!

ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். தற்போது அவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார்.  விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

இதற்கிடையே, தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட, திருப்பதி வெங்கடாஜலபதி புராண வரலாற்றிலும் ஆர்யன் நடித்தார். இதில் வெங்கடாஜலபதியாக அவர் நடித்துள்ளார்.

திருமதி ஞானம் பாலசுப்பிரமணியம் (பம்பாய் ஞானம்) இயக்கியிருக்கிறார்.

இது குறித்து ஆர்யன் கூறும்போது, “அந்தத் திரைப்படத்தில்  நான் சிறப்பாக நடித்திருந்ததால், திருப்பதி தேவஸ்தானம் எனக்கு, ‘யூத் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை அளித்தது.

இந்தத் தகவல் வெளியான பிறகு, பல இடங்களில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன. என்னிடமும் என் தந்தையிடமும் சிலர் பேசினார்கள்.

யூத் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை என் குடும்பமோ,  உறவினரோ, தயாரிப்பாளரோ அளிக்கவில்லை. திருப்பதி தேவஸ்தானம் அளித்தது.

ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து மறைமுகமாக மிரட்டினார்கள்.

இதனால் அந்தபட்டத்தை என் பெயருக்கு முன் போடுவதில்லை என முடிவெடுத்துவிட்டேன்” என்றார்.

அவரிடம், “ரஜினி தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததா” என கேட்கப்பட்டது.

அதற்கு ஆரியன், “ரஜினி ஆன்மிகவாதி. இந்த மாதிரி விசயத்தை எல்லாம் பொருட்படுத்தவே மாட்டார். தவிர என், அந்த நாள் படத்தின் முதல் பார்வை போஸ்டரை அவர்தான் வெளியிட்டார்.

அவருக்கும் இந்த மிரட்டல்களுக்கும் சம்பந்தமில்லை. மிரட்டியவர்கள் குறித்து கூற தற்போது நான் விரும்பவில்லை!” என்றார் ஆர்யன் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.