நாக சைதன்யாவுக்கு போலீஸ் திடீர் அபராதம்

ஐதராபாத்: தெலங்கானா மாநில போலீசார், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களை தவிர மற்றவர்கள் தங்களது கார்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கார்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். கடந்த சில தினங்களாக கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களை மடக்கி போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், ஐதராபாத் அடுத்த ஜூப்ளி ஹில்ஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யா கார் வந்தது. அதில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. உடனே காரை மடக்கிய போலீசார், டிரைவரிடம் ரூ.700 அபராதம் விதித்து பணத்தை வசூலித்தனர். அப்போது நாகசைதன்யா காரில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், மனோஜ் மன்ச்சு ஆகியோரின் கார்களுக்கு போலீசார் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.