’நான் இறந்தால் இவர்தான் காரணம்’ – கர்நாடக அமைச்சர் மீது லஞ்ச புகார் கூறிய நபர் உயிரிழப்பு

கர்நாடகா அமைச்சர் ஒருவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு லஞ்ச புகார் கூறிய கான்ட்ராக்டர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல் (40). அரசுத் துறைகள் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளில் ஒப்பந்ததாரராக இவர் பணியாற்றி வந்தார். இதுதவிர, இந்து வாஹினி என்ற வலதுசாரி அமைப்பின் தேசிய செயலாளராகவும் இருந்து வந்தார்.
image
இதனிடையே, கடந்த வாரம் கர்நாடகா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பாவை இவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதாவது, அவர் உட்பட 6 ஒப்பந்ததாரர்கள் செய்த கட்டுமானப் பணிகளுக்கான தொகையை தராமல் அமைச்சர் ஈஸ்வரப்பா இழுத்தடித்து வருவதாகவும், தொகையை பெற 40 சதவீதம் கமிஷன் தருமாறு மிரட்டுவதாகவும் சந்தோஷ் பாட்டீல் கூறியிருந்தார். மேலும், தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அமைச்சர் தான் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதியதாக தெரிகிறது.
image
இந்நிலையில், உடுப்பியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தோஷ் பாட்டீல் இன்று பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். ஒருசில தினங்களுக்கு முன்பு அமைச்சர் மீது லஞ்சப் புகார் தெரிவித்தவர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.