புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ,கொழும்பு கோட்டையிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி விசேட ரெயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில் ஒன்று இன்றும் எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு காங்கேசன்துறையை நோக்கி பயணிக்கும் இது காலை 5.54 க்கு காங்கேசன்துறையை சென்றடையும்.

இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் 17 ஆம் திகதி விசேட கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படும்.

காங்கேசன்துறையில் இருந்து இந்த ரயில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு கல்கிசையை காலை 6.00 மணிக்கு வந்தடையவுள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் 12 ஆம் திகதி விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த ரயில் இரவு 7.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 5.05 க்கு பதுளையை சென்றடையும்.

இதேபோன்று, பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் 17 ஆம் திகதி மற்றுமொரு ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த ரயில் பதுளையில் இருந்து மாலை 08.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.50 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

பெலியத்தைக்கும் மருதானைக்கும் இடையில் 12,16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இத் தினங்களில் மாலை 03.30 க்கு பெலியத்தையில் இருந்து புறப்படும் விசேட கடுகதி ரயில் மருதானையை மாலை 6.57 க்கு வந்தடையும்.

இதேபோன்று 12,16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் மருதானைக்கும் வெலியத்தைக்கும் இடையில் மற்றுமொரு விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இத் தினங்களில் இந்த ரயில் மருதானையில் இருந்து காலை 6.05 க்கு புறப்பட்டு பெலியத்தையை காலை 9.17 க்கு சென்றடையும்.

புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரை 24 மணித்தியால விசேட பஸ் சேவை அமுலாகும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தூர இடங்களுக்கான சேவையை மேற்கொள்ளும் தனியார் பஸ் வண்டிகளுக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 4 டிப்போக்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் சபை அறிவித்துள்ளது.

 புத்தாண்டை முன்னிட்டு மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.