அம்பேத்கர் பிறந்தநாள் “சமத்துவ நாளாக” கொண்டாடப்படும்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி  எடுக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின்,” அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சூரியன். பலர் வாழ்வில் கிழக்காக இருந்த பகலவன். சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை, கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலம் சமப்படுத்திய போராளி. சாதிக்கொடுமையால் இருண்ட உலகத்தை தனது பரந்த அறிவால், ஞானத்தால் விடியவைத்த விடிவெள்ளி அம்பேத்கர். அவர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியம். அம்பேத்கரின் கருத்துகள் ஆழம் கொண்டவை.

நேற்று மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்ததை போல், அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஐ சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று, அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்றும்,  அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்ப்புத்தாண்டான சித்திரை 1தேதி ஏப்ரல் 13, 14ந்தேதி வருவது வழக்கம். இது காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அதை திமுக அரசு ஏற்க மறுத்து வருகிறது. தை 1ந்தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி வருகிறது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்ப்புத்தாண்டை மறைக்கும் வகையில், அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ந்தேதியை தமிழகஅரசு முன்னிலைப்படுத்தி, அன்று சமத்துவ நாள் என அறிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.