உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 365 பில்லியன் ரூபா சொத்துக்கள் அரசுடைமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கைதுசெய்யப்பட்டவர்களின் 365 பில்லியன் ரூபா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று ,இலங்கையில் இடம்பெற்ற இந்த குண்டு தாக்குதல் சம்பவத்தில் 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்கும் நோக்குடன் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 165 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் உள்ளிட்டவையே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதற்கமைய முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ,68 பேர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சாந்த விக்ரமரத்ன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.