"அப்பா, அம்மா இறந்தப்போகூட லீவு போடல" – 34 வருடத்தில் விடுப்பின்றி பணியாற்றிய போஸ்ட் மேன் சிவன்!

வாழ்க்கையை எவ்வளவு வாழ்ந்து முடிக்கிறோம் என்பதில் இல்லை ஆனந்தம். யாருக்காக வாழ்ந்து முடித்தோம் என்பதில் இருக்கிறது. அப்படி வாழ்ந்ததில் எதை பெற்றிருக்கிறோம் எதை இழந்திருக்கிறோம் என நினைத்தால் சிரிப்பு வருகிறதா, அழுகை வருகிறதா என்பதில் ஒளிந்திருக்கிறது வாழ்க்கைக்கான அர்த்தம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊர் உலகம் கொண்டாடி தீர்த்த மனிதர் சிவன். குன்னூரைச் சேர்ந்த போஸ்ட் மேன். 34 ஆண்டுகள் தபால் துறையில் பணிபுரிந்தவர். எட்டு வருடங்கள் தினமும் 15 கிலோ மீட்டர்கள் காட்டுக்குள் நடந்தே சென்று தபால், மற்றும் மணி ஆர்டர்களை வழங்கியவர். அவர் குறித்த காணொளிகளை பார்க்கையில் இப்போது என்ன செய்கிறார் என பார்க்கத் தோன்றியது. ஏனெனில் கடந்த 2020 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு மனிதன் தன்னுடைய வேலையை எவ்வளவு நேசிக்கிறான் என்பதை அறியும்போது உடல் சிலிர்த்துப் போகிறது. பணியில் இருந்த 34 ஆண்டுகளில் ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காதவர் சிவன். விடுமுறை நாட்களிலும் பணிபுரிந்திருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். வாரம் ஆறு நாட்கள் தபால்களை வழங்குபவர் விடுமுறை நாளான ஞாயிறு அன்றும் தபால் மற்றும் மணி ஆர்டர்களை உரியவர்களிடம் வழங்கி இருக்கிறார். உண்மையில் அந்த நாளைத்தான் உன்னதமான நாளாக நினைக்கிறார் சிவன்.

போஸ்ட் மேன் சிவன்

காரணம் இல்லாமல் இல்லை. மணி ஆர்டர் வந்த நபர் ஊரில் இல்லை என்றால் அதை 7 நாட்கள் மட்டுமே சிவன் கையில் வைத்திருக்கமுடியும். சம்மந்தப்பட்டவரிடம் 7 நாட்களுக்குள் கொடுக்கவில்லை என்றால் மீண்டும் அதை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். குரும்பபாடி பகுதியைச் சேர்ந்த ராதா என்கிற பெண்ணிற்கு மணி ஆர்டர் வந்திருக்கிறது. ஆனால் அவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அந்த வார ஞாயிற்றுக் கிழமை அன்று கோவை மருத்துவமனைக்கே சென்று சிவன் கொடுத்து வந்துள்ளார். ராதாவை போல பலருக்கும் கோவை, மேட்டுப்பாளையம் என சென்று தபால், மற்றும் மணி ஆர்டர்களை கொடுத்திருக்கிறார். ஏன் அப்படி செய்கிறீர்கள் என கேட்டால் “அவங்க அதை நம்பித்தான் இருப்பாங்க, அவங்க கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும், அதைவிட அந்த பணத்தை திரும்ப அலுவலகத்திற்கு அனுப்பிட்டா திரும்ப போய் வாங்குறது கஷ்டம் அதனால்தான்” என்கிறார் சிவன்.

உங்களது 34 ஆண்டு தபால் பயணத்தில் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது இருக்கா சார் என்று கேட்டேன். நான் தபால் கொடுக்குற மக்கள் எல்லாருமே எழுத படிக்க தெரியாதவங்க, பழங்குடி மக்கள், அவங்க என்னை மட்டும்தான் நம்புனாங்க. அந்த நம்பிக்கைல தான் நான் வேலை பார்த்தேன். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெண்ணிற்கு ஓய்வூதியம் வர வேண்டி இருந்தது. ரொம்ப நாளா வரவே இல்லை. தினமும் அந்த பெண் என்னிடம் “சார் மணி ஆர்டர் வந்துருக்கா” என கேட்டுக்கொண்டே இருப்பார். நானும் வரும் வரும் நம்புங்க என சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆறு மாதங்கள் கழித்து அந்தப் பெண்ணிற்கு ஓய்வூதியம் வந்திருந்தது. ரொம்ப சந்தோஷமா எடுத்துட்டுப்போனேன். அவங்க வீட்டுக்கு போகும் போது வீட்டை சுற்றி நெறைய பேர் இருந்தாங்க, என்னங்க விசேஷம் என கேட்டேன். அப்போதுதான் தெரிய வந்துச்சு அந்த பெண் செத்து போய்ட்டாங்கன்னு, என்னால் இப்ப நெனச்சாலும் அழுகை வந்துரும், ஒரு நாளைக்கு முன்னால வந்துருந்தா அவங்களும் சந்தோஷமா போயிருப்பாங்க, நானும் சந்தோஷமா இருந்திருப்பேன். என்னால அதை மறக்கவே முடியாது” என்கிறார்.

15 கி.மீ பயணத்தில் 5 கி.மீ அடர்ந்த காட்டுக்குள் பயணம் செய்த சிவன் பல விலங்குகளைச் சந்தித்திருக்கிறார். அதில் ஒரு முறை யானையிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. தினமும் காலையில் குருவாயூர் கோயில் யானையாக இருந்த கேசவன் யானையை வணங்கிய பிறகே வீட்டில் இருந்து கிளம்புகிறார். `இயற்கையை நான் நம்புகிறேன் இயற்கை என்னை எதுவும் செய்ததில்லை’ என்கிறார். தான் எந்தப் பாதையில் செல்கிறேன் என்பதை அவரின் மனைவியை அழைத்து சென்று அறிமுகப்படுத்தி இருக்கிறார். “ஒரு வேளை நான் போகிற வழியில் எனக்கு ஏதாவது நடந்துவிட்டால் என்னை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால்தான் மனைவிக்கு பாதையை அறிமுகப்படுத்தினேன்” என்கிறார்.

தபால்களை கொடுப்பது, அவற்றை படித்துக் காட்டுவது என ஒரு நடமாடும் தபால் நிலையமாகவே சிவன் வாழ்ந்திருக்கிறார். சிவனின் அம்மா, அப்பா இறந்தபோதும் விடுமுறை எடுக்காமல் வேலைக்குச் சென்றவர் சிவன். “என்னை நம்பி நெறைய பேர் இருக்காங்க, நான் போகலன்னா அவங்க நம்பிக்கை வீண் போய் விடும் என்கிறார் சிவன். எந்தக் குடும்ப நிகழ்வுகளுக்கும் சிவன் செல்லத்ததால் ஒட்டு மொத்த சொந்தங்களும் சிவனது குடும்பத்தை நிராகரித்துவிட்டார்கள். அது குறித்த கவலை சிவனுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவரது மனைவி பூபதிக்கு இல்லாமல் இல்லை. `சிவன் இப்படி வேலையை நேசிக்கிறாரே உங்களுக்கு எதுவும் தோன்றவில்லையா?’ என அவரின் மனைவியிடம் கேட்டால், `ஆரம்பத்தில் எனக்கு பிடிக்கவில்லை, ஆனால் நாங்களே கஷ்டத்தில் இருக்கிறோம் என்பதால், அடுத்தவர்களின் கஷ்டம் என்பதை அறிவேன். அதனால் அவரை நான் தடுக்கவில்லை. அவரோடு நான் கோவை,மேட்டுப்பாளையம் எல்லாம் சென்றிருக்கிறேன்’ என்கிறார்.

போஸ்ட் மேன் சிவன் அவரின் மனவைியுடன்

சிவனின் சேவையைப் பாராட்டி உலகெங்கும் இருந்து கடிதங்கள், பாராட்டுப் பத்திரங்கள் எல்லாம் வந்திருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் 1 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். இயற்கை கை விடாத சிவனை மனிதர்கள் கை விட்டு விட்டார்களோ என்கிற அச்சம் அவரது இன்றைய நிலையை பார்க்கும் போது வராமல் இல்லை. ஊரெல்லாம் பென்ஷன் கொண்டு சென்று கொடுத்தவருக்கு, பென்ஷன் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி. 65 வயதில் ஓய்வு பெற்றதால் அவருக்கு பென்ஷன் கிடைக்கவில்லை. ஒரு நாளைக்கு 5 மணி நேரம் , யாரும் செல்லாத காட்டுக்குள் பயணித்த சிவன் குடும்பம் இப்போது அஞ்சலக சேமிப்பில் இருந்து வருகிற 1000 ரூபாய் வட்டி பணத்தில்தான் நகர்கிறது. பென்ஷன் இல்லை என்பது குறித்து அவர் கவலைப்படுவதில்லை. ஆனால் நாம் வருத்தப்பட வேண்டும். மனிதர்களும், காலமும் அவ்வளவு எளிதில் யாரையும் கைவிடாது சிவன் சார். நம்புங்கள், காலங்கள் மாறும் காயங்கள் ஆற்றும்…..

மீண்டும் முதல் வரிக்கு செல்லுங்கள். வாழ்க்கையை எவ்வளவு வாழ்ந்து முடிக்கிறோம் என்பதில் இல்லை ஆனந்தம். யாருக்காக வாழ்ந்து முடித்தோம் என்பதில் இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.