யாருக்கு இந்த மனசு வரும்… வறுமையில் வாடிய பரியேறும் பெருமாள் நடிகருக்கு புது வீடு!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான நாட்டுப்புற கலைஞர் தங்கராசுக்கு அரசு சார்பில் புதிய வீடு கட்டி கொடுத்துள்ள நிலையில், இந்த வீட்டை திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் திறந்து வைத்தார்.

கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள் சாதிய பாகுபாடுகளை தெளிவாக எடுத்து கூறிய இந்த படம் அந்த ஆண்டு வெளியான ஹிட் படங்களின் வரிசையில் இடம்பிடித்தது. மேலும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில், பரியேறும் பெருமாள் படத்தில் நாயகனின் அப்பாவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தவர் தங்கராசு. நாட்டுப்புற கலைஞரான இவர், பல நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு நடனமாடியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர் பாளையங்கோட்டை அருகே உள்ள இளங்கோ நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் பெய்த மழையில் இவரது வீடு இடிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த அம்மாவட்ட ஆட்சியர் உடனடியாக அதிகரிகளிடம் கூறி இடிந்த வீட்டை பார்வையிட்டதை தொடர்ந்து தங்கராசுவுக்கு புதிய வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

அதன்படி மாவட்ட நிர்வாகம், முற்போக்கு எழுந்தாளர் சங்கம், மற்றும் பல்வேறு நண்பர்களின் துணையுடன் தங்கராசுவுக்கு புதிய வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ் புத்தாண்டு தினமான இன்று வீட்டின் கிரகபிரவேஷம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவுடன் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தங்கராசுவின் புதிய வீட்டை திறந்து வைத்தார்.

இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது போன்ற நலிவடைந்த கலைஞர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கேட்டுக்கொண்டார். மேலும் விளிம்பு நிலையில் உள்ள கலைஞரை தூக்கி விடும் வகையில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் நண்பர்கள் சேர்ந்து வீடு கட்டி கொடுத்து உள்ளனர். சந்தோசமான விசயம், சினிமா மூலம் இது சாத்தியப்பட்டு உள்ளது என்பது மிகுந்த சந்தோசம், இதே போல பல நாட்டுப்புற கலைஞர்களையும் கொண்டு வரவேண்டும் என்பதே எனது ஆசை என்றும் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.