இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். அந்நாட்டின் பல ஊர்களில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலக வலியுறுத்தி, போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் அதிபர் மாளிகை முன்பு உள்ள காலிமுகத்திடலில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் மக்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் நேற்றிரவு முதல் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் 35 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 75 ரூபாயும் உயர்த்தப்பட்டதை கண்டித்து, அந்நாட்டின் பல ஊர்களில் நேற்றிரவு முதல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பொருளாதர நெருக்கடி, விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, எரிபொருளின் விலை மேலும் உயர்த்தப்பட்டது, ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பல ஊர்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

அந்நாட்டின் கேகாலே மாவட்டத்தில் உள்ள ரம்புக்கனையில் இரவு தொடங்கிய போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 15 மணிநேரமாக போக்குவரத்து முடங்கியதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்கார ர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவு எட்டப்பட வில்லை. இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். ஆனாலும் கலையாத போராட்டக்கார ர்கள், போலீசாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 12 பேர் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவனெல்ல நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் , சாலைகளில் ஆங்காங்கே டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த ஊர் வழியாக செல்லும் போக்குவரத்து முடங்கியது.

இதனிடையே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.பல்கலைக்கழ விரிவுரையாளர்கள், மதகுருமார்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்துள்ள பேரணி பெருவளையில் இருந்து காலிமுகத்திடலுக்கு சென்றது. கொழும்பு நகரில் அவர்கள் செல்லும் வழி நெடுக மக்கள் இணைந்து கொண்டால் பேரணி, மிக பிரம்மாண்டமாக காட்சி அளித்தது.

காலிமுகத்திடலில் ஏற்கனவே திரண்டுள்ளவர்களுடன் பேரணியாக சென்றவர்களும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்காக ஏராளமானவர்கள் திரண்டுள்ளதை அடுத்து, அதிபர் மாளிகை முன்பு ராணுவத்தினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பதற்றமாக நிலை உருவாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.