‘கிப்ட்’ தருவதாக மலை மீது அழைத்துச் சென்று வருங்கால கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற இளம்பெண்: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், அனகப்பள்ளி மாவட்டம், படேருவை சேர்ந்த ராமுநாயுடு என்பவருக்கும், ரவிக்கமடம் மண்டலத்தை சேர்ந்த புஷ்பா என்பவருக்கும் அடுத்த மாதம் 29ம் தேதி திருமணம் செய்ய பெரியவர்கள் முன்பு நிச்சயதார்த்தம் செய்தனர். ராமு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், புஷ்பா தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தனியாக பேச ராமுவை வரும்படியும் அழைத்தார். இதனை உண்மை என நம்பிய ராமு, அனகாப்பள்ளி வந்தார். அங்கு வந்த புஷ்பா, ராமுவை மலை மீதுள்ள சாய்பாபா கோயில் அருகே நண்பர்கள் இருப்பதாக கூறி ராமுவை மலை மீது அழைத்து சென்றார். அங்கு ராமுவுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பதாகவும் கண்ணை மூடும்படியும் கூறியுள்ளார். ராமு கண்களை மூடியவுடன் தான் மறைத்து கொண்டு வந்த  கத்தியால் ராமுவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ராமுவை மீட்டு அனகப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பாவை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். தனது விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமணம் செய்து வைக்க முயன்றதாலும், தன் விருப்பத்திற்கு பெற்றோர்  செவிசாய்க்காததாலும் வருங்கால கணவரையே கொலை செய்ய முயன்றதாக இளம்பெண் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.