பக்கிங்காம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும்! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: சென்னையில் ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் அமைக்கப்பட்டது. சென்னையில் உள்ள பக்கிங்காம்  கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2014ல் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் இன்று தலைமைநீதிபதி முனிஸ்வரத்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரகுநாதன், பக்கிங்காம் கால்வாய்க்கு உள்ளும், கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை விருப்பு வெறுப்பின்றி அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமைநீதிபதி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என தெரிவித்ததுடன்,  ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முழுவதுமாக மோசமடைந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அதனை பழையபடி மீட்டெடுக்க வேண்டும் என கூறினார்.

பக்கிங்காம் கால்வாயை அழகுபடுத்தும் போது, நகரமும் அழகாகும் என கூறிய நீதிபதிகள், அதை தொடர்ந்து பராமரிப்பதில் மக்களுக்கும் பங்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கையும், அவற்றுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று, விசாரணையை நீதிபதிகள்,  நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.