திருமழிசையில் ரூ.1,280 கோடியில் குடியிருப்புகள், வணிக வளாகம்: வீட்டு வசதி and நகர்ப்புற வளர்ச்சித் துறையின் 33 அறிவிப்புகள்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் (SAP) இளநிலை திட்டமிடல் (B.Plan) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் ரூ.10 கோடி நிதி வழங்கும், சிஎம்டிஏ எல்லைக்குள் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் வலைபின்னல் சாலை அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பெருந்திரள் துரித ரயில் (MRTS) நிலையங்களில் வணிக செயல்பாடுகள், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கு புது நகர் வளர்ச்சித் திட்டம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்படும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும எல்லைக்குள் வலைபின்னல் சாலை அமைப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்தார். அவர் வெளியிட்ட 33 முக்கிய அறிவிப்புகள்:

> சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் (SAP) இளநிலை திட்டமிடல் (B.Plan) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் ரூ.10 கோடி நிதி வழங்கும்.

> பெருந்திரள் துரித ரயில் (MRTS) நிலையங்களில் வணிக செயல்பாடுகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்படும்.

> கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி), வாடகைதாரர்கள் சட்டம் 2017 மற்றும் நிறைவேற்றப்பட உள்ள தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்போர் உரிமைச் சட்டங்களையும் செயல்படுத்தும் ஒழுங்குமுறை அதிகாரம் பெற்ற வீட்டுவசதி இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

> திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கு புது நகர் வளர்ச்சித் திட்டம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் தயாரிக்கப்படும்.

> மதுரையிலுள்ள தோப்பூர் உச்சப்பட்டி துணை நகரத்திற்கு புது நகர் வளர்ச்சித் திட்டம், நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் தயாரிக்கப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருமழிசை திட்டப் பகுதியில் 16.92 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,280 கோடி மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் (PPP) குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும்.

> 60 இடங்களில், பழுதடைந்த நிலையில் உள்ள சுமார் 10,000 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மறுகட்டுமானம் செய்யப்படும் .

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு கட்டி விற்கப்பட்ட குடியிருப்பு வளாகங்கள் மறுகட்டுமானம் செய்யும் பணிகளுக்கு வாரியம் துணை புரியும்.

> நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கான வாங்கும் திறனுக்கேற்ற குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்.

> பன்னடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரத்தினை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு அளித்தல்.

> சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மெரினா முதல் கோவளம் இடையேயான சுமார் 30 கி.மீ. நீளமுள்ள சென்னை கடற்கரை ரூ.100 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு புத்தாக்கம் செய்யப்படும்.

> சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் நீர்முனை மற்றும் ஏரிக்கரை மேம்பாடு ரூ. 100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

> சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தளப்பரப்பு குறியீடு (Floor Space Index) அதிகரிக்கப்படும்.

> செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்படும்.

> மாநில அளவில் நகர்ப்புற திட்டமிடுதலுக்கென தகுதியான அலுவலர்களைக் கொண்ட தொகுப்பினை, பணி விதிகள் மற்றும் மாற்றுப்பணி நிபந்தனைகளுடன் உருவாக்கப்படும் .

> தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம் 1971-ஐ மறு ஆய்வு செய்ய அகமதாபாத்தில் உள்ள சுற்றுச் சூழல் மற்றும் திட்டமிடல் தொழில்நுட்ப மையத்தை (CEPT) கலந்தாலோசகராக நியமனம் செய்தல்.

> தமிழகத்தில் 10 லட்சம் பேர் வசிக்கக் கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கலை ஒழுங்குபடுத்திட, திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதிசெய்திட நகர வளர்ச்சிக் குழுமங்கள் திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளுக்கு ஏற்படுத்தப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் 2.60 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 133 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் (PPP) ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சென்னை மாவட்டம், திருவான்மியூர், சோழிங்கநல்லூர் (பழைய மாமல்லபுரம் சாலை) மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் சுயநிதி திட்டத்தின் கீழ் 3.18 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 105.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 125 மேம்படுத்தப்பட்ட மனைகளில் ரூ. 59 கோடி மதிப்பீட்டில் பொது தனியார் கூட்டு முறையில் (Joint Venture) குடியிருப்புகள் கட்டப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் சர்வீஸ் அபார்ட்மண்ட் 0.21 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் மற்றும் பருத்திபட்டில் ரூ. 26 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் சென்னை மாவட்டம் அண்ணாநகரில் ரூ.8.37 கோடி மதிப்பீட்டிலும் அலுவலகங்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சென்னை மாவட்டம், திருமங்கலத்தில் 0.63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.50 கோடி மதிப்பீட்டில், வணிக வளாகங்கள் கட்டப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் 0.78 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.

> கோயம்புத்தூர், திருப்பூர், ஓசூர் மற்றும் AMRUT திட்டத்தின் கீழ் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 17 நகரங்கள் உட்பட 20 நகரங்களுக்கான முழுமைத் திட்டங்கள் இந்நிதியாண்டு இறுதிக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் நிறைவேற்றப்படும்.

> நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் உதவி இயக்குநர்கள் மற்றும் கட்டடக்கலை/ திட்ட உதவியாளர்களுக்கு ரூ. 50 லட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

> மக்கள் தொகை 50,000 முதல் 99,999 வரை உள்ள 71 நகரங்களுக்கு சீரான வளர்ச்சியினை உறுதி செய்ய புவியியல் தகவல் அமைப்பின் (GIS) அடிப்படையில் முழுமைத் திட்டங்கள் மறு ஆய்வு, நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் எடுத்துக்
கொள்ளப்படும்.

> பொதுமக்கள், கட்டடங்களுக்கான திட்ட அனுமதிகளை எளிதில் பெறும் வகையில் நகர் ஊரமைப்பு மாவட்ட அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் .

> கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நெரிசலை குறைக்கவும் அதன் சிறந்த பயன்பாட்டினை அறியவும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

> இரண்டாம் முழுமைத் திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி வரம்பிற்குள் முன்மொழியப்பட்டுள்ள 40 சாலை விரிவாக்கப் பணிகளில் (Street Alignment) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் இந்நிதியாண்டில் 10 சாலை விரிவாக்கப் பணிகள் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலுள்ள 15 ஏக்கர் மற்றும் போரூரிலுள்ள 21 ஏக்கர் திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

> சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும எல்லைக்குள் வலைபின்னல் சாலை அமைப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சுமார் ரூ.53 கோடியில் வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.