“பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த நூலை வெளியிட்டார். அவரிடமிருந்து இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ், திரைப்பட நடிகர் ராம்குமார் மற்றும் ஒய்வு பெற்ற IAS செல்வராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் ஏற்புடையதல்ல என தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஆளுநர் எதிர்ப்பாக நடந்த போராட்டத்தில் வீடியோவில் பார்த்தால் கூட ஆளுநர் சென்ற வாகனம், பாதுகாப்பு வாகனத்தில் கொடிகளை வீசி போராட்டம் நடத்தி இருப்பது தெரிகிறது. ஆளுநர் சென்ற வாகனம் அருகே ஏன் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்தனர்? அதேபோல் தேசத்திற்கு எதிராகவும் முழக்கம் எழுப்பி இருக்கின்றனர். இப்படி ஒரு சம்பவம் நடந்ததில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொல்லும் விளக்கம் ஏற்புடையதல்ல. சித்தாந்த ரீதியாக மாற்று கருத்து இருந்தாலும், கருணாநிதி முதலமைச்சர் ஆக இருந்தபோது இதுபோல் நடக்கவில்லை. ஆனால் இப்போது நடந்துள்ளது.
திரைத்துறையில் இருப்பவர்களை நாங்கள் இயக்கவில்லை. திமுக தான் திரைத்துறையை நசுக்குகிறது. அதனால் திரைத்துறையினர் பலர் அவர்களாகவே கருத்து தெரிவிக்கின்றனர். சமீபத்தில் இளையராஜா பேசியதில் அம்பேத்கர் வைத்து அரசியல் செய்தவர்கள் தான் கோபப்படுகின்றனர். அவருக்கு பாரத் ரத்னா, ஜி.எஸ்.டி நோட்டீஸ் என குறைத்து பேச வேண்டாம்.
அம்பேத்கர் குறித்து பேச திருமாவளவன் உடன் விவாதிக்க நான் தயாராகதான் இருக்கின்றேன். இன்னும் ஒரு சில மசோதா ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்பதில் உண்மையில்லை. பல்கலைக்கழக மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்கும் விளக்கத்தை தமிழக அரசு இன்னும் அளிக்கவில்லை” என தெரிவித்தார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 24 ம் தேதி புதுச்சேரி வருவது குறித்தும் அண்ணாமலை பேசினார்.
முன்னதாக இன்று சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஆளுநர் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அளித்த பதில்
1/2 pic.twitter.com/l7B8awkeuc
— TN DIPR (@TNDIPRNEWS) April 20, 2022
சமீபத்திய செய்தி: ‘தமிழக காவல்துறைக்கு விழுந்த கரும்புள்ளி’ – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM