உக்ரைன் அகதிகளால் ஜேர்மனியில் வாழும் ஆப்கன் அகதிகளுக்கு உருவாகியுள்ள எதிர்பாராத பிரச்சினை



உக்ரைனிலிருந்து ஜேர்மனிக்கு வரும் அகதிகளுக்கு இடமளிப்பதற்காக, ஏற்கனவே ஜேர்மனி வந்துள்ள ஆப்கன் அகதிகளை, அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆப்கன் அகதிகளைவிட அதிக அளவிலான அகதிகள் உக்ரைனிலிருந்து ஜேர்மனிக்கு வந்தவண்ணம் உள்ளார்கள்.

உக்ரைனில் நடக்கும் பயங்கர விடயங்கள் குறித்து அறிந்து அவர்களுக்காக கண்ணீர் விட்ட ஆப்கன் அகதிகளுக்கு, தற்போது அந்த உக்ரைன் நாட்டிலிருந்து வரும் அகதிகளாலேயே சற்றும் எதிர்பாராத பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.

மரியம் அர்வீன் (Mariam Arween, 33) தன் வீட்டில் தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காலை சிற்றுண்டி அருந்திக்கொண்டிருக்கும்போது, அவரது வீட்டின் கதவு தட்டப்பட்டது.

மரியம் கதவைத் திறந்தபோது, அங்கே சமூகப் பணியாளர் ஒருவர் நின்றிருந்தார். அவர் மரியம் குடும்பத்துக்கு எதிர்பாராத அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.

ஆம், மரியம் குடும்பம் அந்த வீட்டிலிருந்து வெளியேறவேண்டும், அதுவும் 24 மணி நேரத்துக்குள் என்று கூறியுள்ளார் அந்த சமூகப் பணியாளர். அதாவது, புதிதாக உக்ரைனிலிருந்து வரும் அகதிகளுக்கு இடம் கொடுப்பதற்காக மரியம் குடும்பம் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபன்களுக்குத் தப்பி ஜனவரி மாதக் கடைசியில்தான் ஜேர்மனிக்கு வந்தது மரியம் குடும்பம்.

ஏற்கனவே இரண்டு வீடுகள் மாறிவிட்ட நிலையில், அடுத்து தாங்கள் எங்கே அனுப்பப்படுகிறோம் என்பது மரியம் குடும்பத்துக்குத் தெரியாது. அவரது மூத்த மகள் இப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருக்கிறாள். இப்போது திடீரென ஏன் வேறு பள்ளிக்கு மாறவேண்டும் என்பது அந்தக் குழந்தைக்கு எப்படி புரியும்?

உக்ரைனிலிருந்து புகைப்படங்கள் வெளியானபோது நான் உக்ரைன் மக்களுக்காக அழுதேன் என்று கூறும் மரியம், போரின் கொடுமைகள் எனக்கும் தெரியும். இப்போதும் நான் அவர்களுக்காக அழுகிறேன். நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அகதி அகதிதான், ஆனால், ஏன் எங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என்கிறார் அவர்!
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.