கொழும்புத் திட்ட அறிஞர்கள் கன்பராவிள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம்

புதிய கொழும்புத் திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையில் கல்வியைத் தொடரும் கொழும்புத் திட்ட அறிஞர்களை வரவேற்கும் நிகழ்வு 2022 ஏப்ரல் 14ஆந் திகதி கன்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

ஆண்டுதோறும் சுமார் 10,000 இளங்கலைப் பட்டதாரிகளை ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் உள்ள 40 நாடுகளில் கல்வி கற்கவும், பயிற்சிகளைப் பெறவும் புதிய கொழும்பு திட்ட நிகழ்ச்சித்திட்டம் சந்தரப்பம் வழங்குகின்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பதில் உயர்ஸ்தானிகர், ஆய்வுத் திட்டத்திற்கு இலங்கையை தெரிவு செய்தமைக்காக கொழும்புத் திட்ட அறிஞர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை எடுத்துரைத்த அவர், சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை அவுஸ்திரேலியாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவதாகவும், இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கொழும்புத் திட்டத்தை அமைப்பதற்கு முன்முயற்சிகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார். 1951 இல், இலங்கையின் அப்போதைய நிதியமைச்சர் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் சேர் பெர்சி ஸ்பெண்டர் ஆகியோர் பொருளாதார அபிவிருத்திகளுக்கான பிராந்திய அமைப்பை பரிந்துரைப்பதில் முன்முயற்சி எடுத்திருந்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோசுவா குல்லி, இது தான் இலங்கைக்கான முதல் விஜயம் என்றும், சிறிய ஆனால் பன்முகத்தன்மை கொண்ட தீவுக்குச் செல்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். ‘இயற்கை வளங்களைத் தவிர, 25 நூற்றாண்டுகளின் தொடர்ச்சியான நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் ஆதாரங்களை இலங்கையில் காண முடியும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெற்றோர்களின் மகளான ஹரீன் சோமசுந்தரம், இலங்கையில் தனது இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், குறிப்பாக சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தின் போது உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பங்குபற்றுவது தனக்கு கிடைத்த கௌரவம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை குறித்த விளக்கக்காட்சி காட்டப்பட்டு, நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த காணொளி திரையிடப்பட்ட அதே வேளை, புத்தாண்டு உணவின் சுவையுடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வரவேற்கப்பட்டது. உயர்ஸ்தானிகராலய ஊழியர்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு உணவு மற்றும் இனிப்புக்களை பங்கேற்பாளர்கள் அனுபவித்தனர்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித் திட்டங்களின் மூலம் சமூகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கொழும்புத் திட்டம் அதன் உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிக்கின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

கான்பெரா

2022 ஏப்ரல் 20

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.