இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. சூர்யாவுக்கும் அது நல்ல கம்பேக்காக இருந்தது. இந்தப் படத்தை முடித்தவுடன், அதன் இந்தி ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார், சுதா கொங்கரா. அதனை அபன்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை முடித்துவிட்டு, மீண்டும் சூர்யாவை இயக்கவிருப்பதாகவும் அந்தப் படம் ஓர் உண்மை சம்பவத்தை தழுவி இருக்கப்போவதாகவும் இயக்குநர் சுதா கொங்கரா, விகடனுக்கு அளித்தப் பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் (புனீத் ராஜ்குமாரின் ‘ராஜ்குமாரா’, ‘கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’, பிரபாஸின் ‘சலார்’ படங்களின் தயாரிப்பு நிறுவனம்) தயாரிப்பு நிறுவனம், தங்களுடைய தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா ஒரு படம் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சுதா – சூர்யா இணையும் படத்தைத்தான் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது என்று அனைவரும் ட்வீட் செய்து வருகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. சுதா கொங்கரா – சூர்யா இணையும் புதுப்படத்தை சூர்யாவே தன்னுடைய 2டி நிறுவனத்தில் தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்காக சுதா இயக்கும் படத்தில் வேறொரு முன்னணி நடிகர் நடிக்கவிருக்கிறாராம்.
, .
To a new beginning with a riveting story @Sudha_Kongara, based on true events.@VKiragandur @hombalefilms @HombaleGroup pic.twitter.com/mFwiGOEZ0K
— Hombale Films (@hombalefilms) April 21, 2022
‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்கிறார். ஆனால், அதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்புத் தரப்பு அறிவிக்கவில்லை. அதன் படப்பிடிப்பு வரும் 25ம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் நரன் கதையில் ஒரு படமும் வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்கவிருக்கிறார், சுதா கொங்கரா. இப்படிக் கிட்டத்தட்ட கைவசம் நான்கு ப்ராஜெக்டுகள் வைத்திருக்கும் சுதா, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எடுக்கப்படும் படத்தை எப்போது துவங்குவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தப் படமும் ஓர் உண்மைச் சம்பவத்தின் தழுவல்தான் என்பது கூடுதல் தகவல். முதலில் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கை சுதா முடித்த பிறகுதான், அடுத்த படம் எது என்பது முடிவாகும் என்கிறார்கள்.