சேலத்தில் பிரபல ரவுடி நீராவி முருகனின் கூட்டாளி அரவிந்த் என்பவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது கீழே விழுந்து கால் முறிந்ததால் மாவு கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் பகுதியை சேர்ந்த அரவிந்த என்கிற மச்சி அரவிந்த் மீது 3 கொலை , 3 கொலை முயற்சி,12 வழிப்பறி , 2 ஆள் கடத்தல் என மொத்தம் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணை அடிவாரத்தில் வைத்து வியாபாரி ஒருவரின் கைகடிகாரத்தை அரவிந்த் கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அந்த நபர் அளித்த புகாரின் பேரில், மேட்டூர் அனல் மின் நிலைய சாலை முனியப்பன் கோவில் பகுதியில் மறைந்திருந்த அரவிந்தை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்ததாகவும், அங்கிருந்து அவன் தப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது.