திரும்பிப் போ.. முழக்கமிட்ட ரேச்சல் கோரி.. புல்டோசரை விட்டு நசுக்கிய இஸ்ரேல்!

74 வயதான
பிருந்தா காரத்
, மிகுந்த தைரியத்துடனும், உறுதியுடனும் புல்டோசருக்கு முன்பு போய் நின்று கொண்டு “நிறுத்துங்கள் வீடுகளை இடிப்பதை.. சுப்ரீம் கோர்ட் சொல்லி விட்டது..” என்று முழங்கியபோது டெல்லியே திகைத்து நின்றது. ஆதிக்க மனப்பான்மையுடன், ஆக்கிரமிப்புகளை இடிக்க வந்தவர்கள் அதிர்ந்து நின்றனர். ஒரு தைரியமான தாயாக பிருந்தா காரத்தை பார்த்தனர், நிராயுதபாணியாக நின்று தங்களது கண் எதிரே தாங்கள் இத்தனை காலம் வாழ்ந்த வீடுகளும், கடைகளும் இடிவதை கண்ணீருடன் கண்டு கொண்டிருந்த அந்த மக்கள்.

வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் தீரமிகு செயல்களை செய்து சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட பல பெண்மணிகளைப் பார்க்கலாம். டெல்லி ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்பது உள்நோக்கத்துடன் கூடியதாக பலராலும் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது, குற்றம் சாட்டப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.

இந்த நிலையில்தான் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுடன் புல்டோசருக்கு முன்பு நின்று வீரத்துடன் முழங்கிய பிருந்தா காரத்தை அத்தனை பேரும் பாராட்டி வருகிறார்கள். எங்கு போனார்கள் கெஜ்ரிவாலும், ராகுல் காந்தியும்.. ஏன் வரவில்லை அவர்கள்.. மற்ற தலைவர்களுக்கு என்னவாயிற்று.. அத்தனை ஆண்களும் எங்கு போனார்கள்.. ஒரு பெண்ணுக்கு இருக்கும் தைரியம் இந்த ஆண் தலைவர்களுக்கு ஏன் இல்லை என்ற கோபக் குமுறல்களும் இணையத்தில் கொட்டித் தெறிக்கின்றன.

நாங்களும் புல்டோசரை கையில் எடுப்போம்.. கர்நாடக அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!

இந்த நேரத்தில்தான் நமக்கு
ரேச்சல் கோரி
(
Rachel Corrie
) நினைவுக்கு வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ரேச்சல் கோரி. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். இஸ்ரேலியர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக களமாடிய பெண்மணி. தனது 23வது வயதில் கல்லூரிப் படிப்பின் ஒரு அங்கமாக தெற்கு காஜா முனைப் பகுதிக்குச் சென்றிருந்தார் கோரி. அங்கு பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலியப் படையினரின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட்டங்களில் குதித்தார்.

பாலஸ்தீனக் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இஸ்ரேலியப் படையினர் புல்டோசர் வைத்து இடித்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து ஆவேசமடைந்த கோரி, புல்டோசர் முன்பு போய் நின்று கொண்டு திரும்பிப் போங்கள், இடிக்காதீர்கள் என்று வீராவேசமாக முழங்கினார். ஆனால் இஸ்ரேலியப் படையினர் அதை பொருட்படுத்தவில்லை. ஈவு இரக்கமே இல்லாமல் புல்டோசரைக் கொண்டு கோரியை நசுக்கியே கொன்றனர். ஆனால் தாங்கள் வேண்டும் என்றே செய்யவில்லை, தானாகவே புல்டோசர் நகர்ந்து விட்டது, அதில் கோரி சிக்கிக் கொண்டார் என்று இஸ்ரேலியப் படையினர் பின்னர் கூறினர். ஆனால் கோரியின் ஆதரவாளர்களோ, வேண்டும் என்றேதான் இஸ்ரேலியப் படை, கோரியைக் கொன்றது என்று திட்டவட்டமாக கூறினர்.

உலக நாடுகள், ஆம்னஸ்டி அமைப்பு, மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்தன. ஆனாலும் கோரியின் மரணத்துக்கு நீதி கிடைக்கவே இல்லை. அநீதிகள் தலையெடுக்கும்போது கோரிகளும் முகிழ்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மன் சதுக்கத்தில் குவிந்து போராடிய மாணவர்களை சுட்டுக் கொல்ல பீரங்கிகள் அணிவகுத்தபோது நடுவே போய் நின்று ஒரு நபர் அதை நிராயுதபாணியாக தடுக்க முயன்றார். உக்ரைனிலும் ரஷ்யப் படைக்கு எதிராக இதுபோன்றதொரு சம்பவத்தை நாம் சமீபத்தில் பார்த்தோம். இன்று நமது இந்தியாவிலும் இதேபோன்றதொரு சம்பவத்தை பார்த்தபோது உடலும், உள்ளமும் நடுங்கிப் போய் விட்டது.

மக்கள் துணிந்து விட்டால்.. மமதைகளும், அநீதிகளும் அடிபட்டு மாய்ந்து போய் விடும் என்பதே வரலாறு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.