மின்சார, மெட்ரோ ரெயில்களை போல 500 மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தம், வழித்தடம் அறிவிக்கும் வசதி

சென்னை:

மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களில் பயணிகள் வசதிக்காக அடுத்து வரும் நிலையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அதுபோல சென்னை மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ். உதவியுடன் இந்த வசதியை பயணிகளுக்கு அளிக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 500 மாநகர பஸ்களில் இந்த வசதியை அளிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் பஸ் நிறுத்தம், நிலையங்கள் குறித்தும் வழித்தடங்கள் பற்றிய தகவல் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. அடுத்த பஸ் நிறுத்தம் வருவதற்கு 200-300 மீட்டருக்கு முன்னதாக அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்.

ஒவ்வொரு பஸ்சிலும் 6 ஸ்பீக்கர் பொருத்தப்படும். முன் பகுதியில் 2, பின் பகுதியில் 2, நடுவில் 2 என பயணிகள் கவனிக்கும் வகையில் பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஜி.பி.எஸ். கருவி, ஸ்பீக்கர், ஒலிபெருக்கி சாதனங்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு இருப்பதாக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “இத்திட்டம் 2019-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக 50 பஸ்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது 500 பஸ்களுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இத்திட்டத்தால் மாநகர போக்குவரத்து கழகங்களுக்கு செலவில்லை. வருவாய் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வழித்தடத்திலும் விளம்பரம் செய்யும் வகையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. 2 பஸ் நிறுத்தத்திற்கு இடையே விளம்பரம் ஒலிபரப்புவதன் மூலம் வருமானம் கிடைக்கும்.

அதன் அடிப்படையில் எந்த வழித்தடத்தையும் டெண்டர் எடுக்கக்கூடியவர்கள் தேர்வு செய்யலாம். ஜூன் மாதம் இறுதிக்குள் இத்திட்டம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும் என்றார்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறிவிப்பு வெளியிடப்படும். இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாநகர பஸ் பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

அடுத்த பஸ் நிறுத்தம் குறித்து கண்டக்டரிடம் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இதன் மூலம் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.