கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கவில்லை: மந்திரி சுதாகர்

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

டெல்லி உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதை மாநில அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து எனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். தற்காப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். தகுதியான அனைவரும் 3-வது டோஸ் தடுப்பூசியை பெற வேண்டும்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை குறைத்து கொண்டுள்ளனர். கர்நாடகத்தில் இன்னும் 30 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போடவில்லை. பெங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆனால் பிற மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரிப்பதால், கர்நாடகத்தில் பாதிப்பு அதிகரிக்கும்.

அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டக்கூடாது. அதிகம் பேர் கூடும் இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அதிக தடுப்பூசிகள் போட்டதால் கொரோனா 3-வது அலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை இன்னும் தொடங்கவில்லை.

மாநிலத்தில் 97.9 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் போட்டு முடிக்கப்பட்டுவிட்டது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. இதில் பெற்றோர் உரிய கவனம் செலுத்த வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்.

அதனால் மடாதிபதிகள் விரும்பினால் தேர்தலில் போட்டியிடலாம். ஊழலை தோற்றுவித்ததே காங்கிரஸ் தான். உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

அடுத்து குஜராத் தேர்தலிலும் அக்கட்சி தோற்கும். பின்னர் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி அடையும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.