மனைவியுடன் தாம்பத்யம் நடத்த ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல் ! ராஜஸ்தான் நீதிமன்றம் சலுகை…

ஜெய்ப்பூர்: மனைவியுடன் தாம்பத்யம் நடத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கி ராஜஸ்தான் நீதிமன்றம் சலுகை அளித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வழக்கு காரணமாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்த் லால்  என்பவரை சந்ததி உரிமை (Right Of Progeny) அடிப்படையில் சிறையில் இருந்து விடுவிக்கக்கோரி அவரது மனைவி ரேகா என்பவர்,  ராஜஸ்தான் உயர் நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஃபர்ஜந்த் அலி ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதி நந்த்லாலுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டு தீர்ப்பு கூறியுள்ளது. தீர்ப்பில், குற்றவாளி நந்த்லாலின் மனைவி நிரபராதி. கணவனின் சிறைத் தண்டனையால்,  அவரது  “திருமண வாழ்க்கையுடன் தொடர்புடைய அவரது பாலியல் மற்றும் உணர்ச்சித் தேவைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ஒவ்வொரு வழக்கின் தனித்தன்மையான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு, ஒரு கைதிக்கு சந்ததியைப் பெறுவதற்கான உரிமை உள்ளது.

தண்டனை கைதியின் மனைவி, சந்ததியைப் பெறுவதற்கான உரிமையைப் பறிக்க முடியாது. சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர, எந்தவொரு நபரின் உயிரையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. அதன் வரம்பிற்குள் கைதிகளும் அடங்குவர். எனவே, மனைவி கர்ப்பம் தரிக்க நந்த் லாலுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கிய தீர்ப்பில், தாம்பத்ய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள தனது கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்கக் கோரி, அவரது மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே கருத்தரிப்பு சிகிச்சைக்காக, இரு வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்து உள்ளதாகவும், தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என கூறி பரோல் வழங்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.