சென்னை:
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் நிர்வாக பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐ.ஐ.டி. வளாகத்தில் தொற்று பரவுவதை அடுத்து அங்கு சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 15 பேரும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வட மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் மூலம் தொற்று பெருமளவில் பரவியுள்ளது தெரிய வருகிறது. அரசு துறை கட்டுமானப் பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்யக்கூடிய வட மாநில தொழிலாளர்களை அழைத்து வரும் போது அவர்களை பற்றிய விவரங்களை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தெரிவிக்க வேண்டும்.
குழு குழுவாக அவர்கள் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு வருகின்றனர். அவர்கள் பற்றிய தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு உடனே இலவசமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும்.
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் கட்டுமான பொறியாளர்கள், நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் தொற்று 39 ஆக உயர்ந்துள்ளது. அதனால் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி 92.4 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 77.69 சதவீதமும் போடப்பட்டுள்ளது.
2-வது தவணை தடுப்பூசியை ஒரு கோடியே 46 லட்சம் பேர் போடாமல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி 54 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.
மெகா முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் குறைந்ததால் லட்சக்கணக்கான பணியாளர்களின் உழைப்பு வீணானது. தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால் பெரிய சோர்வு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தடுப்பூசி போட வேண்டிய 2 கோடி பேருக்கு செலுத்தும் வகையில் தமிழகத்தில் மெகா சிறப்பு முகாம்கள் மீண்டும் நடத்தப்படுகின்றன. அடுத்த மாதம் 8-ந்தேதி 1 லட்சம் இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
50 ஆயிரம் மையங்களில் உள்ள ஊழியர்களை தேவைப்படும் இடங்களை கண்டறிந்து அங்கு நகர்த்தி சென்று தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும். காலையில் ஒரு இடத்திலும், மாலையில் மற்றொரு இடத்திற்கும் சென்று தடுப்பூசி போடப்படும்.
இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில்தான் இது போன்ற மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எந்தெந்த பகுதிகளில் முகாம்கள் நடைபெறும் என்பதை பொதுமக்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.