`இயற்கைதான் விவசாயம் செய்யுது; நான் அதை பார்த்துக்கிட்டிருக்கேன்!' – பரிசு பெற்ற இயற்கை விவசாயி

செங்கல்பட்டு மாவட்டத்தின் ‘முன்னோடி விவசாயி’ விருது பெற்றிருக்கிறார் இறையழகன் என்கிற தெய்வசிகாமணி. இவருடைய பண்ணை செங்கல்பட்டு மாவட்டத்தின் ‘சிறந்த பண்ணை’க்கான முதல் பரிசைப் பெற்றிருக்கிறது. இவருடைய உணவுக்காடுப்பற்றி ஏற்கெனவே பசுமை விகடனில் எழுதியிருக்கிறோம் என்பதால், தெய்வசிகாமணி வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். ‘முன்னோடி விவசாயி’ விருதாளருக்குப் பசுமை விகடனின் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, விருதுபெற்ற அனுபவத்தைப் பகிரக் கேட்டோம்.

தெய்வசிகாமணி

”செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பக்கத்துல குழிப்பான் தண்டலம் ஊராட்சியில இருக்கிற புதிய இடையூர் கிராமம்தான் எங்க சொந்த ஊர். எங்களுக்குப் பரம்பரை பரம்பரையா விவசாயம்தான் தொழில். நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிட்டு கொஞ்ச நாள் ஒரு கம்பெனியில வேலைபார்த்துட்டு இருந்தேன். நான் நம்மாழ்வார் சிஷ்யன். ஐயா சென்னை பக்கம் வரும் அவரை சந்திச்சு பேசுவேன். எனக்கும் இயற்கை விவசாயத்து மேல ரொம்ப ஆர்வமுண்டு. ஒரு கட்டத்துல பார்த்துக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.

பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 15 ஏக்கர் நிலம் வாங்கினேன். அப்போ அது வெறும் தரிசு நிலம். அதை லே அவுட் போட்டு விக்கிற எண்ணத்துலதான் வாங்கினேன். ஆனா, நம்மாழ்வார் ஐயா ‘அப்படி செஞ்சுடாதே; போராடிப் பாருய்யா. தோட்டமாக்கலாம்’னு சொன்னார். அவர் சொன்னதுக்கு அப்புறம் லே அவுட் போட எனக்கு மனசு வரலை. இயற்கை விவசாயம் செய்றதுன்னு முடிவெடுத்து நிலத்துல இறங்கினேன்” என்று சிலிர்ப்போடு பேச ஆரம்பிக்கிற தெய்வசிகாமணிக்கு தற்போது 66 வயது ஆகிறது.

விழாவில் ஒரு காட்சி

”வெறும் தரிசு நிலமா கிடந்ததை விவசாயம் செய்றதுக்கு ஏத்தபடி வளப்படுத்தினேன். மொதல்ல தேக்கு, செம்மரம், சந்தனம், கடம்ப மரம், நீர் மருது, வேங்கை, ரோஸ் வுட் மாதிரி பெரிய மரங்களை நட்டு வெச்சேன். இந்த மரங்களுக்கு கீழே கொய்யா, சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை, மா, தென்னை, வாழை, பப்பாளின்னு கிட்டத்தட்ட 15 வகையான பழ மரங்களை நட்டு வெச்சிருக்கேன். இந்த பழ மரங்களுக்குக் கீழே காய்கறிகள், கிழங்குகள், கறிவேப்பிலைனு நிறைய செடிகளை பயிர் பண்ணியிருக்கேன். மரங்கள் மேல மிளகுக்கொடி ஏத்தி விட்டிருக்கேன். மிளகு இப்போதான் காய்க்க ஆரம்பிச்சிருக்கு. பன்னிரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி தரிசா கிடந்த நிலம் இதோ இப்போ உணவுக்காடா பரந்து விரிஞ்சிருக்கு” என்பவருடைய குரலில் குதூகலமும் நிறைவும் பொங்கி வழிகிறது.

”நம்மாழ்வார் ஐயா பேசுறப்போ, ‘விவசாயத்தை மனுஷங்க நாம செய்யக்கூடாது. இயற்கைதான் செய்யணும்’னு அடிக்கடி சொல்வார். என் பண்ணையைப் பொறுத்தவரைக்கும் இயற்கைதான் விவசாயம் செய்துகிட்டிருக்கு. நான் அதை பார்த்துக்கிட்டிருக்கேன்” என்கிற தெய்வசிகாமணி, கடந்த 7 வருடங்களாக தன்னுடைய தோட்டத்துக்கு உரமாக எந்தவிதமான இடுபொருள்களையும் இடுவதில்லை என்கிறார். ”ஆமாங்க, 7 வருஷ காலமா என் பண்ணைக்கு நான் தண்ணி மட்டும்தான் பாய்ச்சுறேன். எந்த உரமும் போடுறதில்லை. மரங்கள்ல இருந்து கீழே விழுற இலைகள் மட்டும்தான் உரம்…” என்று சொல்லி, புதிதாக இயற்கை விவசாயம் செய்ய வருபவர்களுக்கு தன்னம்பிக்கை உரம் இடுகிறார் விவசாயி தெய்வசிகாமணி.

விவசாயி தெய்வசிகாமணி

”மரங்கள்ல ஏத்திவிட்ட மிளகு இப்போதான் காய்க்க ஆரம்பிக்குது சொன்னேனில்லையா… அது இன்னும் ஐந்தாறு வருடங்கள்ல நல்லா காய்க்கத் தொடங்கிடும். பெரிய மரங்கள் வெச்சு 12 வருடங்கள்தானே ஆச்சு. இன்னும் 20 வருடங்கள்ல அந்த மரங்கள் பெரியளவுல வருமானம் கொடுக்க ஆரம்பிக்கும். விளைபொருள்களை விக்கிறதுலேயும் எந்தப் பிரச்னையும் இல்ல.

தமிழ்நாடு வேளாண்மைத்துறையின் தோட்டக்கலைத்துறை, நான் உருவாக்கின உணவுக்காட்டை செங்கல்பட்டு மாவட்டத்துலேயே ‘சிறந்த பண்ணை’யா தேர்ந்தெடுத்திருக்கு. இடுபொருள்கள் இல்லாம உணவுக்காட்டை பராமரிக்கிறதால எனக்கு ‘முன்னோடி விவசாயி’ங்கிற விருது கொடுத்து ரொக்க பரிசா 15 ஆயிரமும் கொடுத்தாங்க” என்றார் முன்னோடி விவசாயி தெய்வசிகாமணி.

வாழ்த்துகள் ஐயா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.