`குழந்தை திருமணம், சிறார்வதை நகர்ப்புறங்களில்தான் அதிகம்!' – கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, யுனிசெஃப் மற்றும் தோழமை அமைப்பு ஆகியவை இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி கூட்டரங்கை கிருஷ்ணகிரியில் நடத்தினர். நிகழ்ச்சியில் சமகால குழந்தைத் திருமண பிரச்னைகள் என்ற தலைப்பில் பேசிய சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சரண்யா சதீஷ், “2014-2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு (NHFS) கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 26.8% குழந்தைத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி கூட்டரங்கு

அதாவது, நான்கில் ஒரு பெண் 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்னரே திருமணம் வாழ்வினை அடைகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 16.3% குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. இதேபோன்று 2019- 2020 மற்றும் 2020-2021-ம் ஆண்டுகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட NHFS (The National Family Health Survey) கணக்கெடுப்பின்படி இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் 3.5% குறைந்துள்ளன. தமிழகத்திலும் 3.5% குறைந்து, 12.8 சதவிகிதம் குழந்தைத் திருமணங்கள் பதிவாகியுள்ளன.

உலக அரங்கில் குழந்தைத் திருமணத்தில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. வங்கதேசம், நைஜீரியா இரண்டாம் மூன்றாம் இடத்திலுள்ளன. இந்திய அளவில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், பீகார் இரண்டாமிடத்திலும் அதைத் தொடர்ந்து தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளது. குழந்தை திருமணங்கள் என்பது கிராமப்புறங்களில் மட்டுமல்ல நகர்ப்புறங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன.

Child Abuse

சமீபத்திய NHFS கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் 27% , நகர்ப்புறங்களில் 14.7% குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில்தான் பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. 2030-க்குள் குழந்தைத் திருமணங்கள் உலக அளவில் குறைக்கப்பட வேண்டும் என ஐ.நா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. போதிய கல்வி அறிவு இல்லாததால்தான் குழந்தைத் திருமணம் நடக்கிறது என்று பொதுவாக தோன்றும்.

கல்வி அறிவு என்ற உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் கிராமப்புறங்களில்தான் இதுபோன்று நடக்கிறது என்று நினைத்துக்கொள்கிறோம். அதுவும் குறிப்பாக மலைவாழ் மக்களிடையேதான் குழந்தைத் திருமணம் அதிகம் நடக்கிறது என்று நினைக்கிறோம். அவர்கள் தங்களுக்கென சில சடங்குகள் சம்பிரதாயங்களை விதித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு வழிவகை செய்து வருகிறது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி கூட்டரங்கு

ஆனால் கிராமங்களில் மட்டும் தான் குழந்தைத் திருமணங்கள் நிகழ்கிறது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமீப காலங்களில் நகர்ப்புறங்களில் அதிகப்படியான குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. உறவுக்குள் திருமணம், தான் விரும்பியவரைத் திருமணம் செய்வது ஆகிய காரணங்களால் குழந்தைத் திருமணம் நகர்ப்புறங்களிலும் நடைபெறுகின்றன. அதே போன்று பாலியல் சீண்டல்களும் நகரங்களில் தான் அதிகமாக நடைபெறுகின்றன. நகர்ப்புற பள்ளிகளிலும், வீடுகளிலும்தான் பாலியல் ரீதியாக குழந்தைகள் பெரும்பாலும் துன்புறுத்தப்படுவதை தினந்தோறும் செய்திகளில் பார்க்கிறோம்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2018 -ம் ஆண்டு தரவுப்படி இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 109 குழந்தைகள்‌ பாலியல் வன்கொடுமைகளாலும், குழந்தை திருமணத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். அதில் வளர்ச்சி அடைந்த நகர்புறங்களில்தான் பெரும்பாலான வழக்குகள் பதிவாகியிருக்கின்றன” என்றார்.

தேவநேயன்

‘தோழமை’ அமைப்பின் இயக்குநர் தேவநேயன், “இன்றைக்கு குழந்தைகள் மீதான வன்முறைகள், குழந்தைகளால் நிகழும் வன்முறைகள் போன்றவைகள் 45% உயர்ந்துள்ளன. ஒரு குழந்தை செயற்பாட்டாளராக 25 வருடங்களாக செயல்பட்டு களப்பணி மேற்கொண்டு வருகிறேன்.100க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து அக்குழந்தைகளை மீட்டுள்ளேன்.

இன்றைக்கு குழந்தைகள் மீதான வன்முறைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், குறிப்பாக ஆன்லைன் ரீதியாகவும் பல வகைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. டெக்னாலஜி உலகில், குழந்தைகள் தொடர்பான குற்றங்கள், செய்திகள் போன்றவை நொடிப் பொழுதில் பலரால் பகிரப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகின்றன. இதனால் அந்தக் குழந்தைக்கு நேரக்கூடிய பாதிப்புகள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி கூட்டரங்கில் பேசுகிறார் சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சரண்யா சதீஷ்.

எனவே, குழந்தைகள் பற்றிய செய்திகள், தகவல்களைப் பரிமாறும்போது, வெளியிடும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகளில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், போட்டோ போன்றவற்றை வெளியிடக்கூடாது” என்றார்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.