சென்னை: ஆண் நண்பருடன் பேச்சு; காட்டிக் கொடுத்த கால் ரெக்காடர் – காதல் மனைவியைக் கொலை செய்த கணவர்

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புகழ்கொடி (எ) டில்லி (23) இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர், சரிதா (19) என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறிதான் இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. அதனால் இருவரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர் புகழ்

இந்நிலையில் சரிதா, அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. மனைவி யாருடன் போனில் பேசுகிறார் என்பதை கண்டறிய அவரின் செல்போனில் ஆட்டோமெட்டிக் கால் ரெக்கார்டர் ஆப்பை புகழ் டவுன்லோடு செய்து வைத்தார். அதில் பதிவான வாய்ஸ் ரெக்கார்டுகளை புகழ் கேட்டார். அப்போது சரிதா, அவரின் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. அதுதொடர்பாக சரிதாவிடம் புகழ்கொடி விசாரித்தார்.

இதையடுத்து சரிதா, இனிமேல் ஆண் நண்பருடன் போனில் பேச மாட்டேன் என்று கணவரிடம் தெரிவித்தாராம். ஆனால் மீண்டும் சரிதா போனில் பேசத் தொடங்கினார். அதனால் ஆத்திரமடைந்த புகழ், கடந்த மூன்று நாள்களுக்கு முன் இரவில் மனைவியிடம் சண்டை போட்டார். அப்போது தகராறு முற்றியதில் மனைவியை புகழ் தாக்கியுள்ளார். அதன்பிறகு புகழ், வீட்டில் தூங்கி விட்டார். காலையில் கண் விழித்த புகழ், மனைவி சரிதா சுயநினைவில்லாமல் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு சரிதா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

கொலை

சரிதாவை பரிசோதித்த டாக்டர்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர். அதனால் சரிதாவை புகழ், அங்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சரிதா உயிரிழந்தார். இதையடுத்து தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சரிதாவின் தாயார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொலை வழக்கு பதிவு செய்த கண்ணகி நகர் போலீஸார் ஆட்டோ டிரைவர் புகழை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடந்துவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.