நெல்லை அருகே கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அடுத்த பழவூர் பகுதியில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றுவது சம்பந்தமாக ஆறுமுகம் என்ற நபருக்கும், காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காவல் ஆய்வாளரை சரமாரியாக குத்தி உள்ளார்.
அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் உடனடியாக செயல்பட்டு, ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி கைது செய்ததுடன், காவல் உதவி ஆய்வாளரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆறுமுகத்தின் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரிஷாவை நெல்லை சரக டிஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.