தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை பேசு பொருளாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக, திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றத்தில் நேற்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமும் அளித்தார்.
இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கோடைக்காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை மனதில் நிறுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை திமுக அரசு எடுத்திருக்க வேண்டும். மின்வெட்டு வந்தவுடன் நிலக்கரி பற்றாக்குறையை போக்க 4.80 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். எப்போது ஒப்பந்தப்புள்ளி முடிந்து எப்போது நிலக்கரி தமிழ்நாட்டின் அனல் மின் நிலையங்களை வந்தடைவது?… அதுவரை மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்ட வேண்டும் என்று கூறுகிறதா.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் நிலக்கரி வரத்து குறைவாக இருப்பதாகவும், நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும் ரயில் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரியை எடுத்து வர இயலவில்லை என்று கூறியிருக்கிறார். கோடைகாலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற நிலையில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
திமுக அரசின் நடவடிக்கை கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. திமுக அரசின் இந்த மெத்தனப் போக்கு கண்டனத்துக்குரியது. மின்வெட்டினால் திமுக ஆட்சியே பறிபோனது என்பதை முதல்வர் நன்கு அறிவார். இதில் உடனடியாக முதலமைச்சர் தலையிட்டு மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் தேவையான நிலக்கரியை விரைந்து பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.