'அமைச்சர்கள் அலுவலங்களில் பணிபுரியும் 18 பாண்லே ஊழியர்கள்' – புதுச்சேரி ஆளுநரிடம் புகார் மனு

புதுச்சேரி: பாண்லே நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.64 லட்சம் ஊதியம் பெற்றுக்கொண்டு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களில் பணிபுரியும் 18 ஊழியர்களை மீண்டும் அவரவர் பணிக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர், தலைமைச்செயலரிடம் மனு தரப்பட்டுள்ளது.

மக்களுக்கு தேவையான பால், அதைச் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் கூட்டுறவு நிறுவனமான பாண்லேயில் ஊதியம் பெற்றுக் கொண்டு பலர் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வருவது பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி விண்ணப்பித்தார். ஆனால் பாண்லே எம்.டி முரளி, அத்தகவலை தர மறுத்து விட்டார். இதையடுத்து கூட்டுறவு பதிவாளரிடம் மேல் முறையீடு செய்தார். அதையடுத்து ஆர்டிஐயில் தரப்பட்ட தகவலை புகாராக ஆளுநர், தலைமைச் செயலரிடம் மனுவாக தந்துள்ளார். அந்த மனு விவரம் தொடர்பாக ரகுபதி இன்று கூறியதாவது:”பாண்லே நிறுவனத்தில் பணிபுரியும் 18 ஊழியர்கள் ஆண்டுக்கு ரூ. 64 லட்சம் ஊதியம் பெற்றுக்கொண்டு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாக ஆர்டிஐயில் தகவல் தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் நஷ்டத்தில் முடப்பட்டுள்ள சூழலில் தொடர்ந்து நன்றாக இயங்கும் சில நிறுவனங்களில் பாண்லேயும் ஒன்று. இந்நிறுவனம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பால், அதைச்சார்ந்த பொருட்களை தயாரிக்கிறது.

இந்நிலையில், இங்கு பணிபுரிய வேண்டிய முதல் நிலை ஆப்ரேட்டர், முதுநிலை உதவியாளர், முதுநிலை ஓட்டுநர், பால்பொருட்களுக்கான உதவியாளர் ஆகிய 18 பேரை சர்வீஸ் பிளேஸ்மென்ட் என்ற அடிப்படையில் வேறு அலுவலகங்களுக்கு பணிபுரிய அனுப்பியுள்ளனர். இதனால் பாண்லேயில் பணிகள் பாதிக்கப்படுகிறது. இவர்கள் இல்லாததால் இதர ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. உற்பத்தி குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஆண்டுக்கு ரூ. 64 லட்சம் பாண்லேயில் இருந்து இவர்களுக்கு ஊதியமாக தரப்படுகிறது.

இதுபோன்ற தவறான நடவடிக்கையால் நிதி இழப்பு ஏற்படுகிறது. பாண்லே நலன் கருதி இதர அலுவலகங்களில் பணிபுரிவோரை மீண்டும் அவரவர் பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தந்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.