நீட் விலக்கு: போஸ்ட்மேன் வேலையைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது அழகல்ல- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை:
நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பிரசாரப் பயண நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அவரது உரை பின்வருமாறு:
இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியை எந்தக் காலத்திலும் – எந்தச் சூழ்நிலையிலும் – எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் திராவிடப் பேரியக்கக் கொள்கைகளின் வழிநின்று நான் நடத்திச் செல்வேன்
இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியானது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக அமைந்திருக்கிறது. நம்முடைய சமூகநீதியை – நாம் பேசிய மாநில சுயாட்சியை, இன்றைக்கு வட மாநிலத் தலைவர்கள், பல முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விழிப்படைந்து வரும் வடமாநில பொதுமக்களும் முழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் நமது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சாதனை!
நீட் மட்டுமல்ல, எத்தகைய நுழைவுத் தேர்வும் – எந்த வடிவிலும் கூடாது என்று சொல்பவர்கள் நாம். நுழைவுத் தேர்வு முறைக்கே 2006-ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தார் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். நீட் தேர்வு முறையை 2013-ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. 
உச்சநீதிமன்றம் நிராகரித்த நீட் தேர்வை, கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரை தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைய முடியவில்லை. ஏன், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருக்கும்வரை நுழையவிடவில்லை. ஆனால் இருண்டகால ஆட்சியைக் கொடுத்த – கெடுத்த இரட்டையர்கள் ஆட்சிக் காலத்தில்தான் நீட் நுழைந்தது, மாநில உரிமைகளை எல்லாம் அடகு வைத்தார்கள். 
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க.வும் ஆதரித்து, சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும் அதை ஆதரித்தது. எனவே கட்சிப் பாகுபாடின்றி ஒருமித்த கருத்தோடு – ஒற்றுமை உணர்வோடு எல்லாக் கட்சிகளும் சட்டமன்றத்தில் ஆதரித்து அதை நிறைவேற்றி, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக நாம் அனுப்பி வைத்தோம். அந்தச் சட்டமுன்வடிவு திரும்ப அனுப்பப்பட்டதைக் கூட ஏறக்குறைய இரண்டு வருடம் மறைத்து, சுயநலத்திற்காக தமிழக இளைஞர்களுக்குத் துரோகம் செய்தவர்கள்தான் இந்த இரட்டையர்கள். அந்த வகையில் தலைவர் கலைஞரின் வழித்தடத்தில் நாம் நீட்டை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
கழக அரசு அமைந்த பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். பிப்ரவரி 1-ஆம் நாள் ஆளுநர் அந்தச் சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பினார். பிப்ரவரி 5 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும் நடத்தி, பிறகு 7-ஆம் நாள் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பினோம். மார்ச் 15 அன்று ஆளுநரைச் சந்தித்து வற்புறுத்தினேன். மார்ச் 31ல் பிரதமரையும் – உள்துறை அமைச்சரையும் சந்தித்து இதுகுறித்து நான் பேசியிருக்கிறேன்.
ஆளுநரிடம் நான் கேட்பது என்பது சட்டமுன்வடிவுக்கான ஒப்புதல் அல்ல. ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.  நாம் கேட்பது, இந்த சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள், ஆசிரியர் சொன்னதுபோல, “போஸ்ட்மேன் வேலை செய்ய  வேண்டும்”என்பதுதான். முன்வடிவை அனுப்பி வைக்கும் அஞ்சல் துறைப் பணியைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.