நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்கள்! முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு…

சென்னை: நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடு பாராமல் வழங்கி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டினார்.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து, வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி,   திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 1 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 9 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியும், 18 சுயநிதி கலை அறிவியல் கல்லூரி உள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம் மானுரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு 2022-23 ஆம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இதை தவிர 1 அரசு பொறியியல் கல்லூரியும், 12 சுயநிதி பொறியியல் கல்லூரியும், 1 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் மற்றும் 1 அரசு உதவி பெறும் தொழில்நுட்ப கல்லூரியும், 14 சுயநிதி தொழில் நுட்ப கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்த கல்லூரிகள் தொகுதி மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை நிறைவு செய்வதால், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் பேசிய பாஜக சட்டபேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தனது கோரிக்கையை உடனடியாக  முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்தார். அதற்கு நன்றி. அதற்கு ஏற்கனவே நன்றி சொல்லிட்டேன், இரண்டாம் முறை நன்றி சொல்கிறேன்.

அதே போல் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு 30 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் அறிவுறுத்தல் பெயரில் அறநிலை துறை அமைச்சர் திட்டங்கள் கொடுத்துள்ளார். அதே போல் நெடுஞ்சாலை துறை அமைச்சர் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி புறவழிச் சாலை சாலை வெகு விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நிலையம் 18 கோடி ரூபாய் திருநெல்வேலியில் அமைத்து தரப்படும் என தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து  கட்சி பாராமல் திருநெல்வேலி மாவட்டத்திற்கு திட்டங்கள் தரும் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.