மாவட்டச் செயலாளர்களுக்கே மீண்டும் வாய்ப்பு – கண்துடைப்பா அதிமுக அமைப்பு தேர்தல்?

மதுரை: ஏற்கனவே பதவியில் இருக்கும் நிர்வாகிகளுக்கே மீண்டும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளை வழங்கி வருவதால் ஆகுமா தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அக்கட்சி மாவட்டச் செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படாமலே குறுநில மன்னர்கள்போல் அப்பதவியில் நீடிப்பார்கள் என்றும் அவர்களை மீறி மாவட்டத்தில் எந்த கட்சி பதவிக்கும் யாரும் எளிதாக வந்துவிட முடியாது என்ற குற்றச்சாட்டும் அக்கட்சியில் நிரந்தரமாகவே உள்ளது. அதற்கு நேர்மாறாக அதிமுகவில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த வரை மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் எந்நேரத்திலும் மாற்றப்படலாம், அவர்கள் இடத்திற்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்ற நிலை இருந்தது.

பதவிப் பறிக்கப்படப்போகிறவர்கள், புதிதாக அவர்கள் இடத்திற்கு வரப்போகிறவர்கள் யார் என்று யாராலும் எளிதாக கணித்துவிட முடியாது. அதுபோல், சரியாக கட்சிப் பணியாற்றவில்லை, தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் ஏதாவது வந்தால் உடனடியாக மாவட்டச் செயலாளர்களை தயவு தாட்சணியம் இன்றி பதவியில் இருந்து தூக்கி எறியவும் ஜெயலலிதா தயங்கமாட்டார் என்பதாலே அதிமுகவில் கடைநிலை நிர்வாகி கூட திடீரென்று மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களாக்கப்பட்ட வரலாறு அடிக்கடி நிகழும்.

அதனால், கட்சியில் மற்ற நிர்வாகிகள் ஜெயலலிதா கவனத்தை ஈர்க்க போட்டிப்போட்டு கட்சிப் பணியாற்றினர். திடீர் உயர்வுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பால் மாற்று கட்சியினரும் அதிமுகவை நோக்கி படையெடுத்தனர். அப்படி சாதாரணமாக இருந்து ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பு முதல் மாவட்ட செயலாளர்கள் வரை அதிகார மையங்களாக இயங்குகின்றனர். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்கள் தங்கள் வந்தவழியை மறந்து தற்போது திமுகவை போல் பெயரளவுக்கு கட்சித் தேர்லை நடத்தி மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பதவிகளுக்கு ஏற்கனவே இருந்து அதிகாரம் செலுத்தியவர்களுக்கு மீண்டும் அப்பதவிகளை தாரைவார்த்து கொடுத்து வருவதாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

‘ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்போது அதிமுக அமைப்பு தேர்தல் தமிழகம் முழுவதும் மும்முரமாக நடக்கிறது. மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கான உட்கட்சி தேர்தலில் ஏற்கனவே அப்பதவிகளில் இருந்தவர்களே மீண்டும் அப்பதவிகளுக்கு விருப்பமனு கொடுக்கின்றனர். அவர்களை எதிர்த்து வேறு யாரும் பெரும்பாலும் விருப்பமனு கொடுக்கவில்லை. மீறி யாரும் விருப்பமனு கொடுத்தால் கட்சியில் ஓரங்கட்டப்படுவோம் என்பதால் அவர்களால் விருப்பமனு கொடுக்க முடியவில்லை.

ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சிலர் போட்டி விருப்பமனு கொடுத்துள்ளனர். அவர்களை வாபஸ் வாங்க கட்சி மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதுபோல் மற்ற மாவட்ட நிர்வாகிகள் பதவியில் இருப்பவர்களும் அதே நிலையில் மீண்டும் தொடர வேண்டும் என்று கூறப்பட்டதால் அந்த பதவிகளுக்கும் பெரியளவிற்கு யாரும் போட்டியிட விருப்ப மனு கொடுக்கவில்லை. அதனால், கட்சி அமைப்பு ரீதியான தேர்தல் அதிமுகவில் பெயரளவுக்கே நடத்தப்படுகிறது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பாவை மீறி யாரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு விருப்பமனு வழங்கவில்லை.

புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமாரை மீறி யாரும் விருப்பமனு செய்யவில்லை. ஆர்பி.உதயகுமார் ஏற்கனவே ஜெ., பேரவை மாநில செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது. செல்லூர் ராஜூவை எதிர்த்து நேற்று மதியம் வரை யாரும் விருப்பமனு வழங்கவில்லை. அதன்பிறகே முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆர்.ராஜாங்கம், எஸ்எஸ்.சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் கடும் எதிர்ப்பையும் மீறி செல்லூர் ராஜூவுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு வழங்கினர்.

கட்சித் தலைமை ஆசி செல்லூர் கே.ராஜூவுக்கு இருப்பதால் அவரே மீண்டும் மாநகர மாவட்டச் செயலாளராகும் வாய்ப்புதான் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்பு இருந்த முன்னாள் அமைச்சர் ராஜநே்திரன்தான் மீண்டும் மாவட்டச் செயலாளராகி இருக்கிறார். விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ரவிச்சந்திரன் மீண்டும் மாவட்டச் செயலாளராக தேர்வாகி இருக்கிறார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக 15 ஆண்டிற்கு மேலாக இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீண்டும் தேர்வாகி இருக்கிறார். திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் தேர்வாகியிருக்கிறார். இருவரும் மாநில பதவியில் வேறு இருக்கிறார்கள். அப்படியிருந்தும் மாவட்டச் செயலாளர் பதவியை இருவருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லை.

தேனி மாவட்டச் செயலாளர் பதவிக்கு எஸ்பிஎம்.சையதுகான் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 8 பேர் விருப்பமனு கொடுத்திருந்தாலும் பேச்சுவார்தை செய்த மீண்டும் சையதுகானையை மாவட்டச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டச் செயலாளர் பதவிக்கு மீண்டும் செந்தில்நாதன் விருப்பமனு கொடுத்துள்ளார். அவரை எதிர்த்து 4 பேர் விருப்பமனு வழங்கியிருந்தாலும் செந்தில்நாதன்தான் மீண்டும் மாவட்டச் செயலாளராக வருவார்.

இப்படி தமிழகம் முழுவதும் பெரும்பாலும் ஏற்கனவே இருக்கும் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளே மீண்டும் தொடர வைக்க கட்சித் தலைமை திட்டமிட்டு இருப்பதால் ஜெயலலிதாவை போல் கட்சி அமைப்பில் புதியவர்களை கொண்டு வந்து கட்சி வளர்க்க தற்போதுள்ள கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்காததாலே நிர்வாகிகள் பாஜக, திமுக பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர். இப்படியே போனால் அதிமுக தேய்ந்து கொண்டேதான் போகும், ’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.